70 வருடகால குடிநீர்ப்பிரச்சினை இந்த அரசாங்கத்தில் தீர்த்து வைக்கப்படும்


 


வி.சுகிர்தகுமார் 0777113659   

  சுமார் 70 வருடங்களாக குடிநீர்ப்பிரச்சினையை எதிர்கொண்டுவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணக்கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மூலமாக கொண்டு செல்லப்படுவதுடன் இந்த அரசாங்கத்தின் மூலமாக விரைவான தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.

கண்ணகிகிராமத்தின் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது அரசியலுக்கான செயற்பாடு அல்ல. மக்களின் அடிப்படை தேவைப்பாட்டை நிவர்த்தி செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடு எனவும் இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டாhர்.

இதேநேரம் அங்கு தற்காலிமான முறையில் வழங்கப்படும் நீர் வழங்கல் செயற்பாட்டை அவதானித்ததுடன் அதன் மூலம் மக்கள் கல்சியம் நிறைந்த ஆபத்தான நீரையே அருந்தி வருவதையும் பார்வையிட்டார்.

இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த மக்கள் தாம் பலமுறை பல சந்தர்ப்பங்களில் பல அரசியல்வாதிகளால் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கண்ணகிகிராம மக்களிடையே அரசியல் காலத்தில் தோன்றும் அரசியல்வாதிகள் தம்மை பலவருடகாலம் இவ்வாறே ஏமாற்றி வருவதாகவும் இந்த ஆட்சியலாவது இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பினர்.

தாம் கேட்பது வாழ்வாதார உதவிகளையோ அல்லது வசதியான வாழ்க்கையினையோ அல்ல. சுத்தமான குடிநீர் இணைப்பையே கேட்கின்றோம்.

அவ்வாறு யார் முன்வந்து தமக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கின்றார்களோ அவர்களுக்கே எதிர்காலத்தில் மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்கை வழுங்குவர் எனவும் உறுதிபட தெரிவித்தனர்.