மக்களுக்காக என்றும் களத்தில்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)கிழக்கு மாகாண மக்களுக்காக என்றும் களத்தில் நின்று வேலை செய்வேன் என மதிக்குமார் பௌண்டேசன் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் குணரட்ணம் மதிக்குமார் தெரிவித்தார்.

மதிக்குமார் பௌண்டேசனை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணுக்கு அறிமுகம் செய்கின்ற வைபவம்  இன்று    அம்பாறை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் சிறப்பம்சமாக காரைதீவையும் அண்டிய பிரதேசங்களையும் சேர்ந்த சமூக சேவைகள் ஆர்வலர்கள் மதிக்குமார் பௌண்டேசன் அமைப்பில் சம்பிரதாயபூர்வமாக அங்கத்துவம் பெற்று கொண்டனர். இதே போல 30 பயனாளி மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

காரைதீவின் மூத்த அரசியல்வாதியும், நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான பி. ரி. தர்மலிங்கம் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் அரசியல் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான எம். சி. ஆதம்பாவா, நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண உப தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் ஆகியோரும்  பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

இங்கு குணரட்ணம் மதிக்குமார் தொடர்ந்து உரையாற்றுகையில்மக்கள் சேவையே மகேசன் சேவை ஆகும், ஏழையின் கண்ணீரில் இறைவனை காணுங்கள் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.எமது மக்களுக்கு இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் என்னால் முடிந்த சேவைகளை செய்து கொடுப்பதில் பெருமகிழ்ச்சியும், ஆன்ம திருப்தியும் அடைகின்றேன் என்றார்.

தலைவர் தர்மலிங்கம் இங்கு தலைமை உரையாற்றியபோது மதிக்குமார் போன்ற இளைஞர்கள் எமது மக்களுக்கு கிடைத்து உள்ள வரம் ஆகும், சுவாமி விவேகானந்தர், அன்னை தெரேஸா போன்ற பெரியார்கள் ஏழைகளுக்கும், ஏதிலிகளுக்கும் செய்கின்ற உதவிகள் இறைவனுக்கு செய்கின்ற உபகாரங்களுக்கு சமமானவை என்று சொல்லி உள்ளார்கள், தம்பி மதிக்குமார் போன்றவர்களின் வழிகாட்டல் எமது சமூகத்துக்கு எப்போதுமே தேவை என்றார்.

சட்டத்தரணி ஆதம்பாவா பேசியபோது பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற விதம் மகிழ்ச்சி தருகின்றது, ஏதேனும் ஒரு வகையில் குறைபாடுகள் அல்லது தேவைகள் இருக்க கூடியவர்களே பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு உள்ளனர், மதிக்குமாரின் சேவைகளை நாம் மனமார பாராட்டி வாழ்த்துவதோடு பயனாளி மாணவர்கள் வாழ்க்கையில் இறை நம்பிக்கை, நேர முகாமைத்துவம், ஒழுக்கம் ஆகியவற்றை கைக்கொண்டு வாழ வேண்டும், இதன் மூலமாக வாழ்வில் நிச்சயம் உயர முடியும் என்றார்.