கமலின் சே்சு கண்டிக்கத்தக்கது

 


சக்கர நாற்காலியில் இருந்துகொண்டு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசிய பேச்சு, பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. தி.மு.கவினரும் மாற்றுத் திறனாளிகளும் இந்தப் பேச்சைக் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா சென்னையில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், "மக்களுக்கு சேவை செய்யும் அந்த ஆக்டிவ் லைஃப்ங்கிறது எனக்கு வேணும். அதனால் ஐந்து வருடத்தில் நடக்கக்கூடிய வேலையைச் சொல்றேன். ஐந்து வருடம்தான். அதுக்கப்புறம் ஒரு பத்து வருடம் வேலை செய்யனும். அதுக்கப்புறம் சக்கர நாற்காலியில் எல்லாம் இருந்துக்கிட்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்" என்று பேசினார். இதற்கு அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் ஆர்ப்பரித்து கைதட்டினர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, "நம்முடைய சக்தி போய்விட்டால், ஆளக்கூடாது என்பது என் கருத்து" என்று தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், "ஏற்கனவே சக்கர நாற்காலியில் இருந்தவரை அப்படிச் சொல்கிறீர்களா? என்று கேட்டபோது, "எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. நான் என்னுடைய சக்கர நாற்காலியும் என்னுடைய முதுமையும் பற்றித்தான் பேசினேன். அவர் மட்டுமே சக்கர நாற்காலியில் அமர்ந்தவர் இல்லை. அதற்கு முன்பாக ரூஸ்வெல்ட் எல்லாம் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், இளமையில் இருந்தார்" என்று பதிலளித்தார்.

இதற்குப் பிறகு இந்த வீடியோ மக்கள் நீதி மய்யத்தின் யூ டியூப் சேனலில் வெளியானபோது, பரவலாகப் பார்க்கப்பட்டது. இதையடுத்து சக்கர நாற்காலியில் இருந்தபடி தொந்தரவு செய்வதாக, மறைந்த முதலமைச்சர் மு. கருணாநிதியையே கமல் குறிப்பிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பலரும் கமலைக் கடுமையாக விமர்சித்தனர்.

வேறு சிலர், கருணாநிதியுடன் கமல்ஹாசன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, கேள்விகளை எழுப்பினர். கமல்ஹாசனின் பேச்சு தனக்கு பெரும் ஏமாற்றத்தைத் தருவதாகக் கூறுகிறார் தி.மு.கவைச் சேர்ந்தவரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன்.

"பாலின பேதங்களைப் போலவே உடல் சார்ந்த பலவீனங்களையும் தாண்டிவந்துவிட்டோம். இம்மாதிரி சூழலில் கமல் இப்படிப் பேசியிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அரசியல் என்பது தடகளப் போட்டி அல்ல. அது ஒரு அறிவுசார் செயல்பாடு. சக்கர நாற்காலி என்பது குறைபாடு அல்ல. குறைபாட்டை சரிசெய்வது.

கமல்

ஊனமுற்றோர் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் மாற்றுத் திறனாளி என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதுகூட ஊடகங்களில் யாரும் அப்படி எழுதுவதில்லை. சினிமாவில் சொன்னால்கூட எதிர்ப்பு வருகிறது. உடல் சார்ந்த பலவீனம் கொண்டவர்கள் பொது வெளியில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தைக் கமல் கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஹிட்லர் காலத்தில் உடல் ரீதியான குறைபாட்டைக் கொண்டிருந்தவர்களை, வதைமுகாம்களுக்கு அனுப்பினார்கள். கமலும் அதைத்தான் பிரதிபலிக்கிறாரா என்ற எண்ணம் வருகிறது.

எந்த ஆரோக்கியமான மனிதனும் எந்த நேரத்திலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தக்கூடியவானாக மாற முடியும். ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்றவர்கள் சக்கர நாற்காலியில் இருந்தபடி பல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். கமல் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சொன்னது, தள்ளுவண்டியில் வந்த கலைஞர் காலத்தில் அல்ல. நன்றாக இருந்த ஜெயலலிதாவின் காலத்தில்தான்" என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பான டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த தீபக், இது தனி மனிதர் சார்ந்த பிரச்சனை அல்ல. சமூகம் முதிர்ச்சி பெற வேண்டும் என்பதையே கமலின் கருத்து காட்டுகிறது என்கிறார்.

"முதுமையைக் குறிக்க எவ்வளவோ அடையாளங்கள் இருக்கின்றன. சக்கர நாற்காலியை வைத்து கருத்தைச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. ஒரு பகுத்தறிவாளராக அவர் இப்படி பேசியிருக்கக்கூடாது. இது மனித மாண்பைக் குலைக்கும் செயல். இன்று இவர் சொல்லியிருக்கிறார். நாளை வேறொருவர் சொல்லக்கூடும். ராதாரவியும் இப்படித்தான் பேசினார். அதுவும் தி.மு.கவில் இருக்கும்போதே இப்படிப் பேசினார். ஆகவே இது தனி நபர் பிரச்சனை அல்ல. நாம் ஒரு முதிர்ந்த சமூகமாக மாற வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது" என்கிறார் தீபக்.

கமல்

இந்த விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் தரப்பிடம் கேட்டபோது, தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்பட்ட விவகாரம் இது என்கிறார்கள்.

"இந்த விவாதமே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்த சில நண்பர்களிடம் பேசியபோது, ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், 15-20 ஆண்டுகளாகும் என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கமல், என்னிடம் அவ்வளவு நேரம் இல்லை. நான் சீக்கிரமே அதைச் செய்ய வேண்டும் என்று சொன்னபோது இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் கருணாநிதிக்கும் தொடர்பே இல்லை" என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொடர்புப் பிரிவின் பொதுச் செயலாளரான சி.கே. குமாரவேல்.

"இது தேவையில்லாத சர்ச்சை. சாதாரண விவகாரம் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது. உண்மையைச் சொன்னால் கருணாநிதியும் கமல்ஹாசனும் மிக நெருக்கமாகப் பழகியவர்கள். பரஸ்பர மதிப்புக் கொண்டவர்கள்" என்கிறார் குமாரவேல்.