தங்களால் முன்வைக்கப்படும் பெரும்பாலான பிரேரணைகள் சபைகளில் அங்கீகரிக்கப்படுவதில்லை

 


வி.சுகிர்தகுமார் 0777113659   கற்றல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் பெண்கள் எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை வலுவூட்டுதல் மற்றும் அவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையிலாக ஊடகவியலாளர்களையும் இணைத்து செயற்படும் முழுநாள் பயிற்சி செயலமர்வு அம்பாரை நகரின் தனியார் விடுதி ஒன்றில் நேற்று நடைபெற்றது.


இச்செயலமர்வில் கருத்து தெரிவிக்கும்போதே  உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகள்  இவ்வாறு குறிப்பிட்டனர்.

அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் சேர்ச் போ கொமன் கிறவுண்ட்அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் இடம்பெற்ற இப்பயிற்சி செயலமர்வில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைவி சைமன் வாணி மற்றும் திட்ட இணைப்பாளர் வாணி திட்ட உத்தியோகத்தர் சுமந்தி உள்ளிட்ட மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செயலமர்வில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைவி சைமன் வாணி செயலமர்வின் முக்கியத்துவம் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களாக இருந்த செயற்பட்டுவரும் பெண்களின் 25 சதவீத
பிரதிநிதித்துவம் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.

இதேநேரம் அவர்கள் ஆற்றிவரும் பணிகள் தொடர்பில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து வளவாளராக கலந்து கொண்ட சேர்ச் போ கொமன் கிறவுண்ட் அமைப்பின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முகாமையாளர்  முஹமட் ஏ.சதாத் பெண்களின் அரசியல் பிரவேசம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் அவர்கள் செயற்பட வேண்டிய முறைமைகள் தொடர்பிலும் விளக்கினார்.

மேலும் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள வில் கிளப் தொடர்பாகவும் இவர்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் குறித்த உறுப்பினர்களது செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் வேலைத்திட்டங்களை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டுவர வேண்டிய அவசியம் தொடர்பிலும் குறிப்பிட்டார்.

இதன் பின்னராக உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அவர்களது கருத்துக்களை முன்வைத்ததுடன் அதிகமான உள்ளுராட்சி மன்றங்களில் தங்களை வாக்களிப்பதற்காக மாத்திரம் பயன்படுத்துவதாகவும் தங்களால் முன்வைக்கப்படும் பெரும்பாலான பிரேரணைகள் சபைகளில் அங்கீகரிக்கப்படுவதில்லை எனவும் தங்களது கருத்துக்கள் வெளிவருவதில்லை எனவும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் எதிர்காலத்தில் பெண்களது செயற்பாடுகளை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டுவரும் பணிக்கு ஊடகவியலாளர்கள் முன்னுரிமை அளிப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் சபை அமர்வுகளில் ஊடகங்களை அழைப்பதற்கான பிரேரணையை நிறைவேற்றுமாறும் ஊடகவியலாளர்களால் சபை உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.Advertisement