ஜமால் கஷோக்ஜிக்கு சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்தார்


 


சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பைடன் அரசு வெளியிட்ட இந்த அறிக்கையில், சௌதி இளவரசர் கஷோக்ஜியை "ஒன்று பிடிக்க அல்லது கொல்லும்" திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக டஜன் கணக்கான சௌதி நாட்டவர்களுக்கு தடை விதித்த அமெரிக்கா, இளவரசர் மீது எந்த தடையும் விதிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் அறிக்கையை "எதிர்மறையானது, தவறானது, ஏற்றுக் கொள்ள முடியாதது" என்று குறிப்பிட்டுள்ள சௌதி அரேபியா அதனை நிராகரித்துள்ளது.

தற்போது சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக செயல்படும் மொஹம்மத் பின் சல்மான், தன் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்திற்கு சென்றபோது, கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் உடல் துண்டாக வெட்டப்பட்டது.

59 வயதான ஜமால் கஷோக்ஜி 2017ஆம் ஆண்டில் தனது தாய் நாடான செளதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். இவர் சௌதி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகர்.

பிறகு அமெரிக்காவின் நாளிதழான வாஷிங்டன் போஸ்டில், இளவரசர் மொஹமத் மற்றும் அவரது கொள்கைகளை விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார்.


அமெரிக்காவின் அறிக்கை என்ன கூறுகிறது?

"துருக்கியில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்லும் திட்டத்திற்கு சௌதியின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக நாங்கள் மதிப்பிடுகிறோம்" என அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரக அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அறிக்கை என்ன கூறுகிறது?

சௌதியின் அரசரான சல்மான் பின் அப்துலசீஸ் அல்-சௌதின் மகனான இளவரசர் மொஹம்மத் பின் சல்மான்தான் தற்போது அங்கு ஆட்சி செய்கிறார்.

சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சலமான் கஷோக்ஜியின் கொலைக்கு ஒப்புதல் அளித்தார் என்று கூறுவதற்கான மூன்று காரணங்களையும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  • 2017ஆம் ஆண்டில் இருந்து அவர்தான் அந்நாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் கட்டுப்பாடு அவருக்குதான் இருக்கிறது.
  • இளவரசர் சல்மானின் ஆலோசகர்களில் ஒருவரும் மற்றும் பல பாதுகாப்பு தகவல்களுக்கு உட்பட்ட சில உறுப்பினர்களும்தான் இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்டனர்.
  • வெளிநாட்டில் இருக்கும் எதிர்ப்பாளர்களை வன்முறையுடன் அடக்குமுறை செய்வதற்கு அவர் வழங்கும் ஆதரவு

கஷோக்ஜியின் கொலைக்கு பொறுப்பானவர்கள் என குற்றம்சாட்டப்படும் தனிநபர்களின் பெயர்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், "எவ்வளவு காலத்திற்கு முன்" அவர்கள் இதனை திட்டமிட்டனர் என்று தெரியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சௌதி - அமெரிக்கா உறவில் சிக்கல்?

அறிக்கை வெளியானதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன், சௌதி அரசர் சல்மான் பின் அப்துலசீஸ் அல்-சௌதியிடம் பேசினார்.
படக்குறிப்பு,

அறிக்கை வெளியானதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன், சௌதி அரசர் சல்மான் பின் அப்துலசீஸ் அல்-சௌதியிடம் பேசினார்.

இந்த அறிக்கை வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே "கஷோக்ஜி தடை" என்ற பெயரில் ஒரு சில பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ப்ளின்கென் அறிவித்தார்.

"கஷோக்ஜியின் கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்ட நபர்கள் தீவிர அதிருப்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக" அவர் குறிப்பிட்டார்.

மேலும், "எந்த ஒரு வெளிநாட்டு அரசின் அதிருப்தியாளர்களை இலக்காக வைக்கும் எந்த குற்றவாளிகளையும் அமெரிக்க மண்ணில் அனுமதிக்கக் கூடாது" என்றும் ஆண்டனி எச்சரித்தார்.

இந்நிலையில், சௌதி இளவரசருக்கு நெருங்கிய சில நபர்கள் மீதும் அமெரிக்க கருவூலத்துறை தடை விதித்துள்ளது. குறிப்பாக, இளவரசருக்கு நெருக்கமான முன்னாள் துணை புலனாய்வு தலைவரும், இந்த கொலையில் ஈடுபட்ட இளவரசரின் தனிப்பட்ட பாதுகாப்புப்படையில் ஒருவரான அஹமத் அசிரி மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சௌதி அரேபியா, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி.

சௌதி சட்டங்கள் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட, தற்போதைய அதிபர் ஜோ பைடன், உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.