"கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக செயற்பட வேண்டும்"


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை தமிழ் பிரதேச செயலகம்   உப பிரதேச செயலகமாக செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்முனை உப பிரதேச செயலகத்தை தமிழ் பிரதேச செயலகமாக  தரமுயர்த்துமாறு  கோரி  தமிழ் மக்கள்  பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களின் ஊடாக  முன்வைத்து வந்தனர். எனினும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் அது இதுவரை சாத்தியமாகவில்லை என கூறப்பட்டிருந்தது.


இதுவரை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலமாக செயற்பட்டு வந்த நிலையில் பிரதேச செயலாளர் ஒருவரை கொண்டு இயங்கி வந்திருந்தது.இருந்த போதிலும் கடந்த நல்லாட்சி காலத்தில் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து  கடுமையான முயற்சிகளை  மேற்கொண்டிருந்தன.எனினும் முஸ்லீம் அரசியல் கட்சிகளின்  கடுமையான எதிர்ப்பின் மத்தியில்  நிர்வாக அதிகாரங்கள் இல்லாத நிலையிலும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் என சம்பிரதாயபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
கணக்காளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கையெடுத்து  அதுவும் இழுபறியாகி  கடந்த நல்லாட்சியில்   அதுவும் சாத்தியமாகாமல் போனது.இந்த நிலையில் தற்போதைய புதிய  அரசு பதவியேற்றதை தொடர்ந்து தற்போது பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து கல்முனை பிரதேச செயலகத்திற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என நாட்டப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றி கல்முனை உப பிரதேச செயலகம் என புதிய பெயர்ப்பலகை நாட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் அறிந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  நேற்று(21) குறித்த பிரதேச செயலகம் தொடர்பான தற்போதைய பெயர் தொடர்பாக அண்மையில் வெளியாகிய கடிதம் சம்மந்தமாகவும் விரிவாக எடுத்துரைத்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 நாடாளுமன்றில்   விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பல பிரதேச செயலகங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன.எனினும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் தாமதமாகின்றன.தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாலா? கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்த தாமதமாகின்றமைக்கான காரணம் என  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே சமயம் நேற்று (21) ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசர சந்திப்பினை மேற்கொண்டும் உள்ளார். 20வது சீர்திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்த 07 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து   கடந்த வாரம் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் விவகாரம், சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமை விவகாரம் போன்ற இன்னும் பல முக்கிய முஸ்லிம் சமூகம் சம்மந்தப்பட்ட விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி   பிரதேச செயலகத்தின் முன்னால்  உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதில்  கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்இகிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குருஇகல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம்  ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன்  ஆகியோரும் கலந்து கொண்டு களமிருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று முஸ்லீம் மக்களும் இதற்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்க்கது.