அடைத்து வைக்கப்பட்டுள்ள வீகர் இஸ்லாமியர்களை கட்டாய உழைப்பில்


 


சீனாவின் வடமேற்கில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வீகர் இஸ்லாமியர்களை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தி வேலை வாங்குவதாக ஒரு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் சோலார் தகடுகளுக்குத் தேவையான பொருட்களில் மிகவும் முக்கியமான பாலி சிலிகான் என்கிற பொருள், சீனாவின் ஷின்ஜியாங் பிரதேசத்தில் இருந்து மட்டுமே 45 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது என பிரிட்டனைச் சேர்ந்த ஷிப்ஃபீல்ட் ஹலம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூறுகிறது.

இந்த பாலி சிலிகான் வீகர் முஸ்லிகளை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தி உற்பத்தி செய்யப்படுவதாக அந்த ஆராய்ச்சி கூறுகிறது. இதை சீன அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றனர்.

அதோடு, சோலார் தகடுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வேறு இடத்தில் இருந்து பாலிசிலிகானை வாங்குமாறும் அந்த ஆராய்ச்சி அறிக்கை வலியுறுத்துகிறது.

பருவ நிலை மாற்றத்தை தடுக்கும் முனைப்பு காரணமாக, சோலார் தகடுகளின் தேவை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

பாலி சிலிகான் குவார்ட்ஸ் என்கிற பொருளில் இருந்து எடுக்கப்படுகிறது. உலகின் நான்கு பெரிய சோலார் தகடு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தி தயாரிக்கப்பட்ட பாலி சிலிகானை பயன்படுத்துவதாக அவ்வறிக்கை கூறுகிறது.

ஷின் ஜியாங் பிராந்தியம்

"இந்த திட்டம் மக்கள் சீனக் குடியரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இருப்பதாகவும், அதில் பணிபுரிபவர்கள் தன்னார்வத்தோடு கலந்து கொள்வதாகவும், வறுமையை ஒழிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் திட்டமிது" என சீன அரசு கூறுவதாகத் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை.

"அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கணிசமன அளவுக்கு ஆதாரங்கள் கிடைத்து இருக்கின்றன. அதோடு வீகர் பிராந்தியத்தில் இதுவரை காணப்படாத அளவுக்கு கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தியதை அந்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் மறு கல்வி மையம் மற்றும் தடுப்புக் காவல் என்கிற பெயரில் மேற்கொள்ளப்படுகிறது"

தமது நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான ஷின்ஜியாங் பிரதேசத்தில், வீகர் இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது சீனா.கடந்த சில ஆண்டுகளில், சீனா 'மறு கல்வி முகாம்கள்' என்கிற பெயரில், சுமார் 10 லட்சம் வீகர் இஸ்லாமியர்களை தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக மனித உரிமை குழுவினர்கள் நம்புகிறார்கள்.

வீகர் இஸ்லாமியர்களை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தி வேலை வாங்குவதற்கும், பெண்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுவதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

சீனா இனப்படுகொலை செய்வதாகவும், வீகர் இஸ்லாமியர்களை அடக்குவதன் மூலம் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்வதாகவும் அமெரிக்கா உட்பட சில நாடுகள் குற்றம்சாட்டின.

சீனா இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுக்கிறது. சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் பிரிவினைவாதத்தையும், இஸ்லாமிய ஆயுதமேந்திய தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போரிடுவதாகக் கூறுகிறது சீனா.