சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு செல்வதில் இருந்து நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



அக்கரைப்பற்று உட்பட எமது எல்லா ஊர் மக்களும் கொரோனாவின் முதலாம், இரண்டாம் அலையில் நிறையவே பாடங்களை கற்றுள்ளனர்.  நாங்கள் நோற்ற நோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக எங்களுக்கு அமைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இனவாதமாாக, பிரதேச வாதமாக கருத்துக்களை தெரிவிப்பதை விடுத்து மக்கள் மிகக்கவனமாக நடந்துகொள்ள வேண்டும். சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

 கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இதற்காக நாங்கள் போராடி மக்களின் நலனில் எப்போதும் கரிசனையுடன் முன்னெடுப்புக்களை செய்து வருகிறோம். அதனை முறையாக செய்யாத பலருக்கும் எதிராக பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவ அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் நாங்களும் ஒரு பொறிமுறையை உருவாக்க ஆலோசித்து வருகிறோம் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸஹி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகர  முதல்வர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

பயணக்கட்டுப்பாட்டை விதித்து மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியும் அதையெல்லாம் மீறி சிலர் தான்தோன்றி தனமாக நடந்துகொள்வதும், அர்ப்பணிப்புடன் இக்காலகட்டத்தில் சேவையாற்றும் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பினருக்கு இடைஞ்சல் விளைவிப்பதும் கூடாத செயலாகும். கொரோனாவை வெற்றிகொள்ள எல்லோரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். சுகாதார வழிமுறைகளை பேணாது வீணாக சுற்றித்திரிந்து நோய்க்காவிகளாக மாறி வீட்டில் உள்ள முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளுக்கு தொற்றை நாம் வழங்க கூடாது. நாம் இந்த தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசுக்கும், பாதுகாப்பு படைக்கும், சுகாதார துறைக்கும் நமது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அக்கரைப்பற்று மக்களுக்கு நிறையவே விழிப்புணர்வு அறிவித்தல்களை முன்வைத்து வருகிறோம். அக்கரைப்பற்று உட்பட எமது எல்லா ஊர் மக்களும் கொரோனாவின் முதலாம், இரண்டாம் அலையில் நிறையவே பாடங்களை கற்றுள்ளனர். ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது பரிசோதனையில் எங்களுக்கு நிறையவே நல்ல செய்திகளே கிட்டியுள்ளது. இருந்தாலும் மக்களை தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறோம். எங்களின் பிரதேசத்தில் தொடர்ந்தும் பரிசோதனைகள் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கிறது.

அக்கரைப்பற்றின் மாநகர சபை, பிரதேச சபை, பொலிஸ், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பாதுகாப்பு படையினர், அரச காரியாலயங்கள் என நாங்கள் சகலரும் ஒன்றிணைந்து இந்த பிரதேசத்தில் மக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறோம். இருந்தாலும் இலங்கை இந்தியாவை அடுத்து மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் நாங்கள் இறுக்கமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு செல்வதில் இருந்து நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். மக்களை காப்பாற்ற அரச இயந்திரம் சிறந்தமுறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அக்கறை செலுத்துவதிலும் பார்க்க மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவே அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்கிறது என்றார்.