சேதனப்பசளையினை மூலம் கற்றாழை வளர்ப்பினை ஊக்குவித்து அதன் ஊடாக வறுமையை ஒழிக்கும் செயற் திட்;டம்



 வி.சுகிர்தகுமார் 0777113659 


  சேதனப்பசளையினை மூலம் கற்றாழை வளர்ப்பினை ஊக்குவித்து அதன் ஊடாக வறுமையை ஒழிக்கும் செயற் திட்;டம் அம்பாரை மாவட்டத்தில் பரிச்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பசுமைப்புரட்சியின் ஊடான வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு கற்றாழை வளர்ப்பை  ஊக்கப்படுத்தும் செயற் திட்டமே  அம்பாரை மாவட்டத்தில் பரிட்சார்த்தமாக மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டம் ஜனாதிபதியின் சுபிட்சத்தை நோக்கிய திட்டத்தின் ஒரு அங்கமாக செயற்படுத்தப்படுவதாக இத்திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் அலியார் ஆஸாத் இன்று தெரிவித்தார்.

திட்டம் பற்றி ஊடகவியளாலர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று அக்கரைப்பற்று இலுக்குச்சேனையில் உள்ள வறுமை ஒழிப்பு திட்டமிடல் காரியாலயத்தில்   நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண பசுமைப்புரட்சியின் ஊடான வறுமை ஒழிப்புத் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் அலியார் ஆஸாத் கற்றாழை வளர்ப்பு பற்றி விளக்கம் அளித்தார்.

இச்செய்கையானது முற்றும் முழுதாக சேதனப்பசளை மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் முதற் கட்டமாக சுமார் 140 சமூர்த்தி பயணாளிகள் கற்றாழை உற்பத்தியில் ஈடுபடுவதாகவும், அவர்களில் பலர் மாதாந்தம் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுவதாகவும் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இது கிழக்கு மாகாண ஆளுனரின் ஆலோசனையின் பிரகாரம் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சமூர்த்தி பயணாளிகள் உற்பத்தி செய்யும் கற்றாழையை தனியார் துறையினர் கொள்வனவு செய்வதற்குரிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்தோடு விரைவில் அம்பாரை மாவட்டத்தில் கற்றாளை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும்தொழிற்சாலையொன்றும் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.  

இதே வேளை, இத்திட்டத்தின் பயன்கள் இன்னும் ஆயிரம் பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டுமென்று கிழக்கு மாகாண ஆளுநர் பணித்துள்ளதாகவும் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதே வேளை, கிழக்கு மாகாண பசுமைப்புரட்சியின் ஊடான வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு கற்றாழை வளர்ப்பை  ஊக்கப்படுத்தும் செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கற்றாழை உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களுக்கு விசேட பயிற்சிகளும் மேற்படி காரியாலயத்தினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.