பயணக் கட்டுப்பாடுகள் உடனடியாக கடுமையாக்கப்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தல்


 


காலம் தாழ்த்தாது பயணக் கட்டுப்பாடுகள் உடனடியாக கடுமையாக்கப்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தற்போது பரவிவரும் தொற்றினை குறைத்து மதிப்பிடக்கூடாது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பயணக் கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமாயின், கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாக வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


நோயாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் இந்த தருணத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இரண்டு தடுப்பூசிகளையும் வழங்க எதிர்பார்த்துள்ள சனத்தொகை மட்டத்தை அடைவதற்கு, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.


அந்த காலத்தை எட்டும் வரையில், தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக்குவதே ஒரே ஆயுதம் என தாம் நம்புவதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.