ஆலையடிவேம்பு பிரிவில்,ஒருவர் மரணம் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் ஒரே நாளில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளராக நேற்று இனங்காணப்பட்ட நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றும் கொரோனா மரணமொன்று பதிவானதுடன் நேற்று (09)  17 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாக பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

கொரோனா தாக்கம் ஏற்பட்டதன் பின்னர் இதுவரையில் 181 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாகவும் 5 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையின் பின்னரே அதிக தொற்றும் அதிக மரணங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்படி 129 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதுடன் 4 மரணங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில் 30 வயதிற்கு மேற்பட்ட 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர்.

ஆனாலும் மக்களது பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

ஆகவே இக்காலகட்டத்தில் மக்கள் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க ஆலையடிவேம்பில் தொடர்ந்தும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கையும் சமகாலத்தில் இடம்பெறுகின்றன. ஆகவே இதுவரையில் தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.