நாவிதன்வெளி ,மாணவர்களுக்கான முதலாவது பைசர்




 


நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் சுமார் 1500 மாணவர்களுக்கான முதலாவது பைசர் ரக கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகிறது.


12வயது முதல் 15வயதுக்குட்பட்ட சகல மாணவர்களுக்கும் இத்தடுப்பூசி பாடசாலை ரீதியாக ஏற்றப்பட்டுவருகிறது.
நாவிதன்வெளிப்பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வினோதினி தட்சணாமூர்த்தி தலைமையில் இத்தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம்  நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் தேசிய பாடசாலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அத்தருணம் அஸ்ஸிறாஜ் தேசிய பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப்பும் கலந்துகொண்டார்.

நாவிதன்வெளிப்பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வினோதினி தட்சணாமூர்த்தி தகவல் தருகையில்:

எமது நாவிதன்வெளிப்பிரிவில் சுமார் 1500மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனா முதலாவது தடுப்பூசி படிப்படியாக பாடசாலை ரீதியாக ஏற்றப்படவிருக்கிறது.

அதேவேளை சுமார் 280 ஆசிரியர்களுக்கும் 2வது 3வது தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. நாம் செல்லும் பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் இத்தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ளவேண்டும்.

எமது கோட்டத்தில் இதுவரை ஓரிரு பாடசாலைகளில் ஓரிரு பிள்ளைகளுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே சுகாதாரத்திணைக்களம் விடுத்துள்ள சுகாதார நடைமுறைவிதிகளை கடைப்பிடிக்கும் அதேவேளை உரியதரப்பினர் தடுப்பூசியை உரியவேளையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவதோடு ஏனையவர்களையும் காப்பாற்றமுடியும் என்றார்.