ரஷ்யப் படைகள் யுக்ரேனுக்குள் நுழைய புதின் உத்தரவு - அடுத்தடுத்த திருப்பங்கள்



 


யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் காலனியாகவே இருந்து வந்திருக்கிறது என்று கூறினார்.

நேட்டோ அமைப்பில் யுக்ரேன் சேருவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலையை நேட்டோ அமைப்பு புறக்கணிப்பதாக புதின் தனது உரையில் மீண்டும் குறிப்பிட்டார்.

யுக்ரேனிடம் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக புடின் அறிவித்தார்.


தொலைபேசி உரை முடிந்த சிறிது நேரத்தில் இரு பிராந்தியங்களையும் அங்கீகரிப்பது தொடர்பான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார். அதில் ரஷ்யப் படைகள் அப் பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு என்ன பொருள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இது யுக்ரேனின் எல்லைக்கும் படைகளை அனுப்புவதற்கான அறிவிப்பு என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எனினும் தங்களது எல்லையில் எந்த மாற்றமும் இல்லை என யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்