மேய்ச்சல் தரையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது காலத்தில் கட்டாயம் வி.சுகிர்தகுமார்  


  எதிர்கால சந்ததியின் நலன்கருதி இனமதத்திற்கு அப்பால் சிந்தித்து மேய்ச்சல் தரையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது காலத்தில் கட்டாயம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கால்நடை பாற்பண்ணையாளர் சங்கத்தின் பிரத்தியேக செயலாளருமான சோ.புஸ்பராஜா தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு கால்நடை பாற்பண்ணையாளர்களின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவு கோளாவில் செந்தமாரை மீனவர் சங்க கட்டடத்தில் முன்னாள் தலைவர் அ.முருகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் புதிய நிருவாகமும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேய்ச்சல்தரை விடயத்தில் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கியதாகவும் சம்மந்தமே இல்லாமல் நீதிமன்ற வழக்கொன்றிற்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இதற்கான தீர்வை விரைவில் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும் மேய்ச்சல் தரை விடயத்தில் செயற்பட்டவர்களையும் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களையும் கௌரவப்படுத்துவதுடன் புதிய நிர்வாக கட்டமைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மருதமுனை தொடக்கம் சம்மாந்துறை மற்றும் பொத்துவில்வரை உணவுத்தேவைக்காக நாளாந்தம் 86 கால்நடைகள் தேவைப்படுவதாகவும் கூறிய அவர் வட்டமடு பிரதேசத்தில் இருந்து நாளாந்தம் 4200 லீற்றர் பால் பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் சனத்தொகைக்கேற்ப உணவுக்காகவும் பாலுக்காகவும் உற்பத்தி செய்யப்படும் கால்நடைகள் போதுமானதாக இருக்காது. ஆகவே சமூகத்தின்பால் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் எதிர்கால சந்ததியின் நலன்கருதி இனமதத்திற்கு அப்பால் சிந்தித்து மேய்ச்சல் தரையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது காலத்தில் கட்டாயம் என கோரிக்கை விடுத்தார்.
வளமுள்ள நமது பிரதேசத்தை சோமாலியா எத்தியோப்பியா நாடுகள் போன்று உருவாக்காமல் அதனை தடுப்பதற்கு கால்நடையாளர் சங்கம் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் தலைவர் சங்கத்தின் கடந்தகால செயற்பாடுகளையும் சமகாலத்தில் சங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மற்றும் அதன் சவால்களையும் எடுத்துரைத்தார்.
மேலும் சங்கத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் சங்க யாப்பு விதிகளுக்கு அமைய புதிய நிருவாக தெரிவின் தேவைப்பாடு தொடர்பாகவும் தெரிவு செய்யப்படும் புதிய நிருவாகத்திற்கு தனது ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து செயலாளரினால் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன் பொருளாளரினால் கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினரும் சங்கத்தின் கடந்த கால செயற்பாட்டாளரும் ஆலோசகருமான த.பூபாலபிள்ளையின் உரையின்போது கால்நடை மேய்ச்சல் தரை விடயத்தில் அரச அதிபர் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களிலும் கோரிக்கை விடுத்ததாகவும் இந்நிலையில் மேய்ச்சல்தரை பிரதேசத்தை ஒரு சில அரசியல்வாதிகளின் பலத்துடன் சிலர் விவசாய நிலமாக மாற்ற முயற்சித்தாகவும் கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் மதகுருமார் சகிதம் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சங்கத்தின் பிரத்தியேக செயலாளருமான சோ.புஸ்பராஜா நேரடியாக களத்தில் இறங்கி நிறுத்தியதோடு மட்டுமல்லாது அரச மட்டத்திலும் நீதித்துறை மட்டத்திலும் நிலையான தீர்வை பெற நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூர்ந்ததுடன் என்றும் கால்நடையாளர் சங்கம் அவருக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தனது மூச்சு இருக்கும்வரை மேய்ச்சல்தரை விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனவும் உறுதியளித்தார்.
இறுதியாக உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சங்கத்தின் பிரத்தியேக செயலாளருமான சோ.புஸ்பராஜா
இதன் பின்னர் சங்கத்தின் புதிய தலைவராக சி.விக்னேஸ்வரனும் உபதலைவராக பே.யோகநாதனும், செயலாளராக சௌ.கோகுலனும் உப செயலாளராக சீ.அண்ணாத்துரையும் பொருளாளராக ச.லோகேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதியாக உரையாற்றிய புதிய செயலாளர் ஏகோபித்த தெரிவின் மூலம் தன்னை தெரிவு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதேநேரம் சங்கமும் சங்க உறுப்பினர்களும் மேய்ச்சல் தரை விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதாகவும் குறித்த விடயத்தில் சுயாதீனமாக செயற்பட முடியாமல் தடுத்த சக்திகளை நீதித்துறை மூலமும் நிருவாக மட்டம் மற்றும் அரசியல் மட்டத்திலும் வெற்றிகொள்ள எடுத்த முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் மேய்ச்சல் தரை விவகாரத்தில் சிறைவாசம் மற்றும் உயிரிழப்புக்களை சந்தித்த சங்க உறுப்பினர்களின் தியாகங்களையும் இதன் மூலமே இன்று சங்கம் முன்னேற்றகரமான இடத்திற்கு வந்துள்ளதையும் ஞாபகமூட்டினார். இதனை கருத்தில் கொண்டு செயலாளர் எனும் பொறுப்புடன் சங்கத்தை முன்னேற்றகரமான இடத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்றும் குறிப்பிட்டார்.