வரலாறு காணாத வாகனங்கள் வரிசை, அக்கரைப்பற்றில்




 


.(சுகிர்தகுமார்)



  எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று ஹினு அப்புகாமி அன் சண்ஸ் எரிபொருள் வழங்கும் நிலையத்தில் வரலாறு காணாத வாகனங்கள் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பதை இன்று அவதானிக்க முடிகின்றது.
அக்கரைப்பற்று சந்தை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று இராணுவமுகாமை அன்மித்தாக பல நூற்றுக்கணக்கான ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் அதுபோல் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சிங்கள மகாவித்தியாலயத்தின் பின்பாக அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை சுற்றிவரும் வீதியினை கடந்து மறுபுறத்திலுள்ள பழைய பத்திரகாளியம்மன் வீதியினையும் தாண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் காண முடிந்தது.
நேற்று காலை முதல் காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் ஆங்காங்கே சிறிய அளவில் உணவு சமைத்து உண்பதையும் சிலர் கரம்போட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு நேரத்தை கடத்துவதையும் இங்கு உணர முடிகின்றது.
அரச உத்தியோகத்தர்கள் விவசாயிகள் வியாபாரிகள் ஆட்டோ சாரதிகள் என நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் அலைந்து திரிவதையும் பலர் மனமுடைந்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தமையும் கவலை அளித்தது.
இன்று நண்பகல் அளவில் பெற்றோல் கிடைக்கலாம் எனும் நம்பிக்கையுடன் மக்கள் பெரும்சோகத்துடனும் காத்திருப்பதையும் அதேநேரம் அரசை கடிந்தவண்ணமும் காணப்படுகின்றனர்.  இதேநேரம் ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் (15) காலை முதல் டீசலை பெற்றுக்கொள்வதற்காக உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசைகளில் வெயில் மழைக்கு மத்தியிலும் காத்திருந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

எது எவ்வாறாயினும் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் மீண்டும் காத்திருக்கும் நிலையானது பொதுமக்கள் மத்தியில் விசனத்தை உண்டுபண்ணியுள்ள நிலையில்  மக்கள் மன உளைச்சலுடன் அமைதி காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது