திருமலை மாவட்ட பிரதம பொறியியலாளராக செயற்பட கேதீஸனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை




 




பாறுக் ஷிஹான்


வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்டிருந்த பொறியியலாளர் என். கேதீஸனின் நியமனத்தினை ஆட்சேபித்து பொறியியலாளர் எம்.எம். றியாஸினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மீளாய்வு வழக்கானது இன்று (17) ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது கௌரவ நீதியரசர்கள் குறிப்பிட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை திருகோணமலை மாவட்ட பிரதம பொறியியலாளராக செயற்பட கேதீஸனுக்கு இடைக்கால தடை விதித்துக் கட்டளையிட்டனர்.

பொறியியலாளர் றியாஸ் சார்பாக சட்டத்தரணி பாத்திமா பெனாஸிரின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியாவுடன் சட்டத்தரணிகளான திலினி விதானகமகே மற்றும் ஏ.எல்.ஆஸாத் ஆகியோர் மன்றில் தோன்றினர். 

குறித்த வழக்கின் விசாரணையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி யு.எல்.  அலி சக்கியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட கட்டளையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கென்பது குறிப்பிடத்தக்கது.