புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு திடல்




 

பாறுக் ஷிஹான்




அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை(18) ஆரம்பமான இந்நிகழ்வானது அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் திடல் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.அத்துடன் கண்காட்சி போட்டி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு அதிதிகளாக கலந்து கொண்டோர் அதில் பங்கேற்று விளையாடினர்.


தொடர்ந்து சமய ஆராதனை அதிதிகள் விளக்கேற்றல் வரவேற்புரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு திடல் தொடர்பிலான பெட்டக காட்சி அத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய டெனிஸ் திடல் அம்பாறை டி.எஸ் சேனநாயக்கா பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

 குறித்த நிகழ்வில் அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ டக்ளஸ்  கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் இலங்கை டென்னிஸ் சங்க தலைவர் இக்பால் பின் இஷாக்   அம்பாறை மாவட்ட   பிரதி பொலிஸ் மா அதிபர்  தமயந்த விஜய ஸ்ரீ  இராணுவ டென்னிஸ் சங்க உப தலைவர் பிரிகேடியர் பி.விதானகே  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க  உள்ளிட்ட கிழக்கு மாகாண  முப்படை உயரதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் பொலிஸார் பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர். 

உருவாக்கப்படுவதன் நோக்கம் அம்பாறை நிர்வாக மாவட்டத்தில் 456 பாடசாலைகள் உள்ளன. ஆனால் அவற்றில் டென்னிஸ் மைதானங்கள் எதுவும் இல்லை. திகாமடுல்ல மாவட்டத்தில் இருந்து டென்னிஸ் வீரர்களை உருவாக்குதல்.இந்த டென்னிஸ் வீரர்களை  தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் 27.10.2022 அன்று டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரியில் டென்னிஸ் மைதானம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.


 குறித்த புதிய டென்னிஸ் மைதானம் 02 மாதங்கள் 20 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதுடன்  இந்த டென்னிஸ் மைதானத்தின் செலவு 58 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும்.மேலும் இந்த  டென்னிஸ் மைதானம்  நிர்மாணமானது   டி.எஸ் சேனநாயக்க கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.அத்துடன் இந்த நிர்மாணத்திற்கு அம்பாறை வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தகர்கள்   சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இது தவிர  டென்னிஸ் மைதானத்தை நிர்மாணிப்பதற்கான பணியாளர்களை  இலங்கை இராணுவம்  இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் பங்களிப்புகளை வழங்கி இருந்தது.இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்பப் பங்களிப்பை இலங்கை இராணுவ டென்னிஸ் சங்கத்தின் பிரிகேடியர் பிரியங்கர விதானகே வழங்கினார்.அத்துடன் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் மற்றும் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே. திரு. தமயந்த விஜய ஸ்ரீ முன்னின்று வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.