இந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி உலக தூக்க தினம்


 


ஒரு நாள் முழுவதற்குமான அலுவலகப் பணிகளுக்கு பின் வீட்டுக்கு செல்லும் உங்களின் முக்கிய தேவை என்னவாக இருக்கும்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இதற்கான பதில் தூக்கமாகவே இருக்கும்.


முந்தைய நாளின் களைப்பில் இருந்து விடுபடவும், இன்றைய நாளை புத்துணர்ச்சியோடு தொடங்கவும் நல்ல தூக்கம் மிக முக்கியம். வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் போன்றவை காரணமாக பலரும் தேவையான அளவு தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகின்றனர்.


போதிய அளவு தூக்கம் இல்லையென்றால் பல்வேறு நோய்களுக்கு அது வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தூக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி உலக தூக்க தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருபொருள் - ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம்.


நமது உடல்நலம், மனநலம் போன்றவற்றுக்கு உணவு, உடற்பயிற்சி போன்றவை எந்தளவு அவசியமோ தூக்கமும் அதே அளவு அவசியம். எவ்வித தடங்கலும் இல்லாமல் தினமும் வழக்கமான நேரத்தில் தூங்குவது நாள்பட்ட நோய்கள், உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்கும் என்று 'வோர்ல்ட் ஸ்லீப் டே' நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.


உலகம் முழுவதும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.


உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?

14 மார்ச் 2023

ஆணும் ஆணும் சேர்ந்து குழந்தை பெற முடியுமா? ஆண் எலியின் உயிரணுக்களில் இருந்து கருமுட்டை தயாரித்த விஞ்ஞானி

10 மார்ச் 2023

சுய இன்பம் செய்யாமலே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கட்டுக்கதைகளும் அறிவியல் உண்மைகளும்

6 மார்ச் 2023

தூங்கும்போது நம் உடலில் என்ன நடக்கிறது?

தூக்கமின்மை குறித்து பார்ப்பதற்கு முன்பாக தூக்கம் என்றால் என்ன என்பதை அலசுவோம்.


தூங்கும்போது நம் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


"வளர்சிதை மாற்ற (Metabolism) பணிகளில் ஒன்றுதான் தூக்கம். வளர்சிதை மாற்றத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அனபாலிசம்; மற்றொன்று கெடபாலிசம்.


இவற்றை சமன்படுத்தும் பணிகள் தூக்கத்தின்போதுதான் நிகழ்கின்றன.


எனவே, தூக்கம் என்பது மிக அவசியம் என்று கூறுகிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் எஸ். ஜெயராமன். தூக்கத்தின்போதுதான் நமது உடலில் அணுக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.


தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு குறைந்துவிடுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் உடலில் தோன்றுகின்றன," என்று எஸ்.ஜெயராமன் குறிப்பிடுகிறார்.


உலக உறக்க தினம்

பட மூலாதாரம்,JAYARAMAN

படக்குறிப்பு,

மருத்துவர் ஜெயராமன்


தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ?

ஒரு சராசரி நபருக்கு தினசரி 6 முதல் 8 மணி நேரம் வரையிலான தூக்கம் அவசியம் என்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.


“பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு 14 மணி நேரம் வரை தூக்கம் அவசியம்.


வயதாக ஆக இந்த நேர அளவு குறைந்து விடுகிறது. 60 முதல் 70 வயதை கடந்தவர்கள் தூங்கும் நேரம் மிகவும் குறைவு. வயதானவர்களில் சிலர் தினசரி 4 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றனர்,” என்றும் அவர் கூறினார்.


இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலான 8 மணி நேரத்தில் தூங்க பழக்குவது சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்த ஜெயராமன் இதில், 1 மணிநேரம் முன்னர் பின்னர் இருப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிடுகிறார்.


“தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அப்படியே பகலில் தூங்கினாலும் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் தூங்கலாம். அதற்கு மேல் தூங்குவது உங்களின் இரவு தூக்கத்தை கடுமையாக பாதிக்கும்,” என்றும் அவர் எச்சரிக்கிறார்.


எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை விட எந்தளவு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பது முக்கியம் என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.


“தூக்கத்திற்கு நடுவில் விழித்து உடல் உபாதைகள் கழிக்க செல்வது, தூக்கத்தில் சுவாச அடைப்பு, குறட்டை போன்றவை ஏற்படாமல் ஆழ்ந்து தூங்குவதுதான் சிறப்பானது. இதனால் காலையில் நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.”


மொபைல் போன்ற மின் சாதனங்களால் ஏற்படும் பாதிப்பு என்ன?

இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் போன்களை பயன்படுத்துவது போன்றவை தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த கருத்துடன் தான் உடன்படுவதாக மருத்துவர் ஜெயராமன் கூறுகிறார்.


“செல்போன் போன்ற மின்சார சாதனங்களின் வரவால் மனிதர்கள் தூங்கும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. நமது மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் இருந்து மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. தூக்கத்தைத் தூண்டும் சுரப்பியான மெலடோனின் இருட்டான சூழலில் அதிகமாக உற்பத்தியாகி உடலை தூங்குவதற்கு தயார் படுத்துகிறது.


ஒளி நிறைந்த சூழல் மெலடோனின் உற்பத்தியைக் குறைப்பதோடு, உங்கள் உடலுக்கு விழித்திருப்பதற்கானச் சமிக்ஞைக் கொடுக்கிறது. இரவு நேரத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தினாலோ, தொலைக்காட்சி பார்த்தாலோ, அதிலிருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியை குறைக்கிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கமின்மை வேறு பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.” என்று அவர் விளக்கினார்.


உலக உறக்க தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குழந்தைகளிடம் உள்ள இணைய பழக்கம் தொடர்பாக தங்களிடம் எந்த குறிப்பிட்ட தரவுகளும் இல்லையென்றும் அதேவேளையில், குழந்தைகள் இணைய வசதியுடன் மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் (உடல், நடத்தை மற்றும் உளவியல்-சமூகம்)" என்ற தலைப்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் நடத்திய ஆய்வை மேற்கொள் காட்டி பதிலளித்தார்.


அப்போது, 23.80 சதவீத குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு படுக்கையில் மொபைல் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார். மொபைல் பயன்பாடு காரணமாக 37.15 சதவீத குழந்தைகளின் கவனம் செலுத்தும் திறன் குறைவை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


குழந்தைகளிடம் மொபைல் போனை தருவது என்பது தவறான பழக்கம் என்று எச்சரிக்கிறார் ஜெயராமன், “தற்போதைய அவசர யுகத்தில் குழந்தைகளை பார்த்துகொள்வது கடினமாக இருப்பதாக கூறி பெற்றோர்கள் அவர்களின் கைகளில் மொபைல் போனை கொடுத்துவிடுகின்றனர். மொபைல் இருந்தால் குழந்தைகள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.


ஆனால், இது தவறான பழக்கம். குழந்தைகள் தூங்கும் நேரத்தை இது பாதிக்கும். மேலும், அவர்களின் புத்திக்கூர்மையை இது பாதிக்கிறது,” என்றார்.


உலக உறக்க தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தூக்கத்தில் உணவு ஏற்படுத்தும் தாக்கம்

மொபைல் பயன்பாட்டைப் போன்று உணவுப் பழக்கமும் நமது தூக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறுகிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.


“தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் இரவு உணவை சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இரவில் காலதாமதமாக உணவு சாப்பிடுவது நாம் தூங்குவதை தாமதப்படுத்தும்.


இதேபோல், சிலர் இரவில் உணவை சமைக்க நேரம் இல்லாமல் உணவு செயலிகள் மூலமாக கண்ட நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவது ஆகியவை உங்களின் தூக்கத்தை பாதிக்கும். கடலை, பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது” என்றார்.


“ஜப்பான் மக்கள் ஒக்கினாவா என்ற டயட் முறையை பின்பற்றுகின்றனர். சர்க்கரைவள்ளி கிழங்கு, வெண்டக்காய், பகற்காய், மீன் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துகொள்கின்றனர். யக்கிஷோபா என்ற நூடூல்ஸ் வகையை உணவில் சேர்த்துகொள்கின்றனர்.


இரவு உணவை முன்னரே அவர்கள் சாப்பிட்டு விடுகின்றனர். மேலும் மூன்று வேளையையும் வயிறு முட்ட சாப்பிடாமல் முக்கால் வயிறுவரை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதெல்லாம் அவர்கள் நீண்ட நாட்கள் நிம்மதியுடன் வாழ உதவுகிறது ” என்றும் அவர் தெரிவித்தார்.


உலக உறக்க தினம்


தூக்கத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

வானம்பாடி மற்றும் அந்தை நபர்கள் (Lark and owl persons) என்ற ஒப்பீடு கூறப்படுவது உண்டு. இரவு 11 மணிக்கு முன்பாக தூங்க சென்று காலை 8 மணிக்கு முன்பாக விழிப்பவர்களை வானம்பாடி என்றும் இரவு 11 மணிக்கு பின்பு தூங்க சென்று காலை 8 மணிக்கு பின்பாக விழிப்பவர்களை ஆந்தை என்றும் கூறுவார்கள்.


இன்றைய இளைஞர்கள்`ஆந்தை` பண்பை அதிகமாக பின்பற்றுகின்றனர் என்று கூறுகிறார் மருத்துவர் மீனாட்சி.


“இரவு தூக்கம் என்பது மிக அவசியம். இரவு நீண்ட நேரம் கண்முழித்து தூங்காமல் இருப்பது உடல்பருமன், சர்க்கரை வியாதி, இதய நோய், ரத்த கொதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


இரவு பணியில் ஈடுபடுவர்கள், தங்கள் உணவுப்பழக்கத்தை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். இரவு பணி என்பதே உடலுக்கு கெடுதல்தான். அதிலும் உணவு பழக்கத்தை முறையாக பின்பற்றாமல் இருப்பது மேலும் கெடுதல் தரும்.


எனவே, குறைந்தபட்சம் ஒரு பாதிப்பையாவது குறைத்துக் கொள்ளலாம். ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தூங்குவதற்கு முன்பாக டீ, காபி போன்றவை குடிப்பதற்கு பதிலாக பால் குடிப்பது நல்லது,” என்கிறார்.


தூங்கும் அறையை முடிந்துவரை இருட்டாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மெலடோனின் உற்பத்தி அதிகரிக்கும். இது நல்ல தூக்கத்துக்கு உதவும் என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.


“மெலடோனின் சுரப்பி குறைபாடு இருந்தால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். தற்போது இதனை சரி செய்வதற்கு சிகிச்சைகளும் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பாக மின் சாதனங்களை பயன்படுத்துவது உங்களின் தூக்கத்தை பாதிக்கும் என்று முன்பே கூறியிருந்தேன். எனவே, முடிந்தவரை தூங்க தயாராவதற்கு 2 அல்லது 1 மணி நேரத்துக்கு முன்பாகவே மின் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். தூங்கும்போது கைக்கு எட்டும் தூரத்தில் மொபைல் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.


இரவு பணி செய்பவர்கள், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் எவ்வித தொந்தரவும் இல்லாமல் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். அறையை இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். இதேபோல், ஒரு சிலர் பணி நாட்களின்போது 4 மணி நேரம் தூங்குவது விடுமுறை நாட்களில் 10 மணி நேரம் வரை தூங்குவது போன்றவற்றை பின்பற்றுகின்றனர். இதுவும் தவறுதான். தினமும் ஒரே மாதிரியான தூங்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்துகிறார்