'காலி அரங்கில்' முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்




 


4வது டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. முதல் இன்னிங்கிஸ் 186 ரன்கள் குவித்த இந்திய ஆட்டக்காரர் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கியது.


ஆமதாபாத்தில் நடைபெற்றுவந்த 4வது டெஸ்ட் போட்டியின் முடிவை இன்று முற்பகல் வரை இந்திய ரசிகர்கள் ஒருவித பதற்றத்தோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தாலோ அல்லது ஆட்டம் டிராவில் முடிந்தாலோ ஜூன் மாதம் நடைபெறும் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியாமல் போகும் என்பதே அதற்கான காரணம். இந்த ஆட்டம் டிராவில் முடியும் சாத்தியமே அதிகமாக இருந்ததால், இந்திய அணி டெஸ்ட் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போய்விடுமோ என்ற அச்சம் இந்திய ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், 12 மணிக்கு மேல் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.


இதயத்துடிப்பை எகிற வைத்த நியூசிலாந்து - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா


இந்திய ரசிகர்களின் நிம்மதிக்கு காரணம் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவுதான். இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் நியூசிலாந்தில் வெற்றிபெற்றது. இதனால் டெஸ்ட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் போட்டியில் இந்தியாவுடன் இருந்த இலங்கை அணி, அந்த வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது.


மறுபுறம், ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் டிராவிலேயே முடிந்தது. முத இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களும் இந்திய அணி 571 ரன்களை எடுத்திருந்தது. 4வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை எடுத்திருந்தது.


5-ஆவது மற்றும் கடைசி நாளான இன்று குன்னேமன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே 6 ரன்கள் சேர்த்திருந்த குன்னேமன், அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த லபூஷனே, டிராவிஸ் ஹெட் உடன் இணைந்தார். இந்த கூட்டணி மிகப்பொறுமையாக ரன்களை சேர்த்தது.


முதல் விக்கெட்டை இன்றைய ஆட்டம் தொடங்கிய 5-ஆவது ஓவரிலேயே வீழ்த்திய இந்திய அணி அடுத்த விக்கெட்டை வீழ்த்த 60-ஆவது ஓவர் வரை காத்திருக்க வேண்டிருந்தது.



சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் எடுத்திருந்தபோது அக்சர் படேலிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.


அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ரன் குவிக்க பெரிதாக ஆர்வம் காட்டாமல், நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.


ஆஸ்திரேலியா அணி விக்கெட்டுகளை விரைவாக இழக்கவில்லை என்றாலும், ரன் குவிப்பில் சொல்லிக்கொள்ளுமளவு வேகம் தென்படவில்லை. ஒருகட்டத்தில், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் புஜாராவும் பந்துவீச்சில் ஈடுபடும் அளவுக்கு ஆட்டம் மிக பொறுமையாக நகர்ந்துகொண்டிருந்தது.



ஆட்டம் முடிய சுமார் 15 ஓவர்கள் மீதமிருந்த போது இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். அப்போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் லபூஷனே 63 ரன்களும், ஸ்மித் 10 ரன்களும் எடுத்து அப்போது களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.


ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் அவர் 186 ரன்களை எடுத்திருந்தார். தொடர் நாயகர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர். போட்டிக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, `டெல்லி டெஸ்ட் போட்டி நான் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று என்று நினைக்கிறேன், ஏனென்றால் நாங்கள் விளையாட்டில் மிகவும் பின்தங்கியிருந்தோம். மீண்டு வர வேண்டியிருந்தது என்றார்.


இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 17ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.