ஓஸ்கார் விருது வென்ற RRR இசையமைப்பாளர், மரகதமணியின் மனது மறக்க முடியாத தமிழ்ப் பாடல்கள்





BEST ORIGINAL SONG

"Naatu Naatu," from "RRR," music by M.M. Keeravaani; lyrics by Chandrabose


 1990ல் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான எம்.எம். கீரவாணியை அதற்கு அடுத்த ஆண்டே மரகதமணி என்ற பெயரில் தமிழில் அறிமுகப்படுத்தினார் கே. பாலசந்தர். தமிழில் அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 15க்குள்தான் இருக்கும் என்றாலும் சில மறக்கமுடியாத தமிழ்ப் பாடல்களைத் தந்திருக்கிறார்.


தமிழில் அறிமுகமான அழகன் படத்திலேயே தமிழ் திரைப்படப் பாடல் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தார் அவர். மரகதமணி இசையமைத்து தமிழில் வெளியான சில இனிமையான பாடல்களின் பட்டியல் இது.


1. சங்கீத ஸ்வரங்கள் (அழகன்): அழகன் திரைப்படத்தில் கதாநாயகனான மம்மூட்டியும் நாயகியான பானுப்ரியாவும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல் இது. இந்தப் படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும்கூட, இப்போதும் யாராவது தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினால் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டே சுட்டிக்காட்டும் அளவுக்கு, காலத்தால் அழியாத பாடல் இது. அருமையான இசை, அட்டகாசமான வரிகள் என எந்தத் தருணத்திலும் கேட்கத் தகுந்த பாடல் இது. இந்தப் பாடலின் பின்னணியில் வரும் காட்சியில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பு துவங்குவதற்கு முன்பாக ஒலிக்கும் பின்னணி இசையையும் பாடலின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருப்பார் மரகதமணி. இந்தப் பாடலை சந்தியா என்பவரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் பாடியிருப்பார்கள்.


ஆஸ்கர் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி: மொழி எல்லைகளை கடந்த இசை சாதனையாளர்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்கர் விருது வென்றது ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் - ஆஸ்கர் மேடையில் கீரவாணி

9 மணி நேரங்களுக்கு முன்னர்

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

4 மணி நேரங்களுக்கு முன்னர்

2. மழையும் நீயே (அழகன்): இந்தப் பாடலும் அதே பாடத்தில் மம்முட்டிக்கும் பானுப்ரியாவுக்கும் இடையிலான பாடல்தான். இருவருக்கும் இடையிலான காதல் வளரும் நிலையில், பின்னணியில் ஒலிக்கும் பாடல் இது. இந்தப் பாடலில், மம்மூட்டிக்கு ஒரு கீ போர்டை வாங்கி அனுப்பும் பானுப்ரியா, "இசையைவிட இனிமையானவருக்கு - ப்ரியங்களுடன்" என்று எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையையும் வைத்திருப்பார். பதிலுக்கு, பானுப்ரியாவுக்கு ஒரு காரை வாங்கி அனுப்பும் மம்மூட்டி, "என்னைப் புதுப்பித்த புதியவளுக்கு" என்று எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையை காருக்குள் வைத்திருப்பார். மனதை வரும் மெல்லிசையும் வைரமுத்துவின் வரிகளும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் குரலும் சேர்ந்து மறக்க முடியாத பாடலின் பட்டியலில் இந்தப் பாடலைச் சேர்த்தன.


3. காலமுள்ளவரை (நீ பாதி நான் பாதி): கௌதமியும் ரகுமானும் நடித்த 'நீ பாதி.. நான் பாதி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், மிக வித்தியாசமான இசையுடன் இடம்பெற்றிருந்தது. வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியமும் சித்ராவும் பாடியிருந்தார்கள். முதல் முறை கேட்கும்போதே பிடித்துப்போகும் இந்தப் பாடல், அந்தத் தருணத்தின் சிறந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்றாக இருந்தது.


4. நிவேதா (நீ பாதி நான் பாதி): ஒரு பாடல் நெடுக, ஒரே ஒரு வார்த்தையை வைத்து மட்டும் உருவாக்கி, அந்தப் பாடலை ஹிட் செய்ய முடியுமா? அதைச் செய்து காட்டினார் மரகதமணி. இந்தப் பாடல் நெடுக கதாநாயகி கௌதமி ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயரான 'நிவேதா' என்ற ஒரு வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப வரும். இருந்தபோதும், சலிப்புத்தட்டாத வகையில் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்.


 ஆஸ்கர் விருது - கீரவாணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

5. நன்றி சொல்லிப் பாடுவேன் (சேவகன்): நடிகர் அர்ஜுன் இயக்கிய இந்தப் படத்தில் அவரும் குஷ்புவும் நாயகன் நாயகியாக நடித்திருப்பார்கள். பெண் குரல் ஒலிக்கும்போது சோகமாகவும் ஆண் குரல் சந்தோஷமாகவும் பாடும் இந்தப் பாடல் அந்த சமயத்தில் தேநீர் கடைகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.


6. கம்பங்காடு கம்பங்காடு (வானமே எல்லை): இந்தப் படத்தில் ப்ருத்விராஜும் விசாலி கண்ணதாசனும் இணைந்து பாடுவதைப் போல எடுக்கப்பட்ட இந்தப் பாடல், இப்போது கேட்டாலும் புதுமையாக ஒலிக்கக்கூடியது.. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, மரகதமணியும் சித்ராவும் இணைந்து பாடியிருந்தார்கள்.


7. மறக்கமுடியவில்லை (ஜாதிமல்லி): 1993ல் வெளியான ஜாதிமல்லி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இப்போது எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது தெரியாது. ஆனால், இந்தப் படம் வெளியான தருணத்தில் ஒரு மிகச் சிறந்த நினைவெழுச்சி பாடலாக இது இருந்தது. குஷ்புவுக்கும் முகேஷிற்கும் இடையிலான பாடலாக இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் சித்ராவும் பாடியிருந்தார்கள். "மழை ஆடிய எங்கள் வீதியில், அலை ஆடிய தண்ணீர் மேலே/விளையாடிய காகித கப்பல்/ மறக்க முடியவில்லை/ நான் ஆடிய காகித கப்பல்/ தண்ணீரில் மூழ்கும் முன்னே கண்ணீரில் மூழ்கிய சோகம்/மறக்க முடியவில்லை" என்ற வரிகள் பலரால் அப்போது தொடர்ந்து முணுமுணுக்கப்பட்டன.