டிவிட்டரை நடத்துவது “வலி மிகுந்த பணி”





 டிவிட்டரை நடத்துவது “வலி மிகுந்த பணி” அது “ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வை போன்றது” என பிபிசிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார் ஈலோன் மஸ்க்.

பெரும் பணம் படைத்த தொழிலதிபரான எலான் மஸ்க் தகுந்த நபர் கிடைத்தால் டிவிட்டரை தான் விற்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணல் டிவிட்டரின் தலைமையகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிகப்படியான நபர்களை பணியிலிருந்து நீக்கியது, போலி செய்திகள், ஈலோன் மஸ்கின் பணி வழக்கங்கள் குறித்து இந்த நேர்காணலில் பேசப்பட்டது.

அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஈலோன் மஸ்க், கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறார்.

டிவிட்டரை வாங்கியது குறித்து வருந்துகிறீர்களா என எலான் மஸ்கிடம் கேட்டதற்கு, “இது ஏதோ ஒரு பார்ட்டிக்கு செல்வது போல அல்ல. அந்த வலி மிக அதிகம்.” என தெரிவித்தார்.

டிவிட்டரை நிர்வகிப்பது குறித்து கேட்டதற்கு, “அது சலிப்பாக இல்லை. அது ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வு” என தெரிவித்தார்.

“கடந்த பல மாதங்களாக அழுத்தம் நிறைந்துள்ளது” என்று தெரிவித்தாலும் நிறுவனத்தை வாங்கியது சரியான முடிவு என்றே தான் நினைப்பதாக மஸ்க் தெரிவித்தார்.

மேலும் டிவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்த எலான் மஸ்க், அதிகப்படியான வேலை பளுவால் சில நேரங்களில் தான் அலுவலகத்தில் தூங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக தெரிவித்தார். “நூலகத்தில் நான் தூங்குவதற்கு என்று ஒரு இடம் உண்டு அங்கு யாரும் செல்ல மாட்டார்கள்.” என்றார்.

சில நேரங்களில் சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை பதிவிடுவது குறித்து கேட்டதற்கு, “நான் அதிகாலை 3க்கு பிறகு டிவீட் செய்யக்கூடாது என நினைக்கிறேன்” என்றார்.

பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து கேட்டதற்கு, “பொதுவாக பிபிசி, அரசு ஊடகம் என சொல்வதை விரும்புவதில்லை என்பது எனக்கு தெரியும்” என்றார்

இந்த வாரத் தொடக்கத்தில், பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை சரி செய்ய வேண்டும்” என பிபிசி டிவிட்டரிடம் கேட்டுக் கொண்டது.

“பிபிசி எப்போதும் சுதந்திரமாக செயல்படும். பிரிட்டன் மக்கள் செலுத்தும் அனுமதி கட்டணத்திலிருந்தே பிபிசிக்கு நிதி வருகிறது.” என பிபிசி தெரிவித்திருந்தது.

பிபிசியின் அடையாளத்தில் “வெளிப்படையான நிதி” என டிவிட்டர் மாற்ற முயன்றதாக தெரிவித்த ஈலோன் மஸ்க் “நாங்கள் முடிந்தவரை துள்ளியமாக இருக்க விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

“எனக்கு பிபிசியின் மீது மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்த மஸ்க், இந்த நேர்காணல் சில கேள்விகளை கேட்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் வித்தியாசமாக செய்யும் சில விஷயங்கள் குறித்து கருத்துகளை பெறுவதற்கு இது உதவியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.