ஒலுவில் லெவன் ஸ்டார் அணி சம்பியன்




 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ்  விளையாட்டுக் கழக 40 வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் றொபி 2023 வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டித்தொடரில் ஒலுவில் லெவன் ஸ்டார் அணி சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.
அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நேற்று (14) மாலை நடாத்தப்பட்ட இறுதிப்போட்டியில் பள்ளிக்குடியிருப்பு றகிமியா அணியினை எதிர்கொண்ட ஒலுவில் லெவன் ஸ்டார் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
32 கழகங்களை உள்ளடக்கி 8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஒலுவில் லெவன் ஸ்டார்; முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பள்ளிக்குடியிருப்பு றகிமியா அணிக்கு வழங்கியது. இதன்படி துடுப்பெடுத்தாடிய பள்ளிக்குடியிருப்பு றகிமியா அணி 8 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்களை பெற்றனர்
62 எனும் வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஒலுவில் லெவன் ஸ்டார்  6.2 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றனர்.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஒலுவில் லெவன் ஸ்டார் அணியின் மலீக் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்டநாயகனாக ஒலுவில் லெவன் ஸ்டார் அணி; வீரர் சிபான் தெரிவு செய்யப்பட்டார்.
அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ்  விளையாட்டுக்கழக தலைவரும் கணக்காளருமான புனிதராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக ஜொலிபோய்ஸ் அணியின் முன்னாள் தலைவர்கள் சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நிலையினை பெற்ற பள்ளிக்குடியிருப்பு றகிமியா அணிக்கான வெற்றிக்கிண்ணத்தையும் 30 ஆயிரம் ரூபா பணப்பரிசையும் ஜொலிபோய்ஸ் அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்த்தகருமான ஆரியதாச டட்லி வழங்கி வைத்ததுடன் சம்பியன் கிண்ணத்தையும்; 50 ஆயிரம் ரூபா பணப்பரிசையும் பிரதம அதிதி பிரதேச செயலாளர் வி.பபாகரன் வழங்கி வைத்தார்.
இதேநேரம் இச்சுற்றுப்போட்டி தொடரை நடாத்திய ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் 2023 ஆம் ஆண்டில் 7 தொடரில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.