பிரதேச செயலக பொங்கல் விழா - 2024





 பிரதேச செயலக பொங்கல் விழா - 2024


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் துறைநீலாவணை கிராம பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய பிரதேச பொங்கல் விழா - 2024 நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.


காலை 8.30 மணியளவில் துறைநீலாவணை தில்லையம்பல பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று, ஆலயதுக்கு அருகாமையில் கதிரறுவடை நடைபெற்றதுடன்  நெற்கதிர்கள் பிரதேச செயலக பிரிவின் அறநெறி பாடசாலை மாணவர்கள், கலைக் கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளடங்கலாக பண்பாட்டு பவனியாக துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது.


கலாசார விழுமியங்களுடன் பண்பாட்டு பவனியாக கொண்டுவரப்பட்ட நெற்கதிர்கள் கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்ததும் சமய வழிபாடுகளுடன்  பாரம்பரிய முறையில்  உப்பட்டி அடித்து பொலிதூற்றப்பட்டு பின்னர் நெல் குற்றப்பட்டு பொங்கல் பானையில் புத்தரிசியிடப்பட்டு நிகழ்வுகள் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டன.


மங்கல விளக்கேற்றல் நிகழ்வுகளை தொடர்ந்து, பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள், கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் கிராமிய நடனங்கள், பாடல்கள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் என்பன அரங்கேற்றப்பட்டது.


மேலும் அறநெறி பாடசாலை மாணவர்கள், கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான கோலம் போடுதல், பூ மாலை கட்டுதல் மற்றும் கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் போன்ற  விளையாட்டுகள் என்பன இடம்பெற்றதுடன் வெற்றியீட்டியோருக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. 


அத்துடன் துறைநீலாவணை யுனைடட் விளையாட்டு கழக நிருவாகத்தினரால் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் கண்ணகை அம்மன் ஆலய நிருவாக்கத்தினரால் அம்மன் புகழ் பாடும் இறுவட்டு ஒன்றும் வெளீயீட்டு வைக்கப்பட்டது.