இறுதி யுத்தத்தில் இலட்சக்கணக்கான மக்கள் படு கொலை செய்யப்படுவதற்கு காரணமாகவும் உந்துகோலாகவும் இருந்தவர்கள் என்பிபி கட்சியினர்




 வி.சுகிர்தகுமார்              


 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இலட்சக்கணக்கான மக்கள் படு கொலை செய்யப்படுவதற்கு காரணமாகவும் உந்துகோலாகவும் இருந்தவர்கள் என்பிபி கட்சியினர் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கரைப்பற்று கோளாவிலில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(03) மாலை நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர் க.கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் தொண்டர்கள் வேட்பாளர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.
பின்னராக மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்குமான ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இங்கு உரையாற்றிய அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பேரினவாத கட்சிகள் காலாகாலமாக தமிழர்களின் பலத்தை உடைக்க முயற்சி எடுக்கின்றனர். அதேபோல் இன்று என் வி பிபியினரும் களத்தில் வந்துள்ளனர். இவர்கள் கடந்த காலத்தில் ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் அதிகளவான கொலைகள் நடந்ததற்கு காரணமானவர்கள். இனப்படுகொலை நடப்பதற்கு ஒத்துழைத்தவர்கள்.
தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என வீடு வீடாகவும் பௌத்த விகாரைகளிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள்.ஆகவே அவர்களை ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு செயற்படுவது வரலாற்றுத்துரோகமாக அமையும் என்றார்.