கல்முனை RDHS யினால் மனிதாபிமான உதவி



 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால், 639 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன். 107 வீடுகளும் முற்றாகச் சேதமடைந்தன. இதனால் தங்களது உடமைகளை இழந்து நிர்க்கதிக்குள்ளான மக்கள் பொது இடங்களில் தங்கியுள்ளனர்.

இவர்களின் துயரத்தினைக் கருத்தில் கொண்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையிலான பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனர்த்த மனிதாபிமான குழுவினர் நேற்று (07) தெஹியத்தகண்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் வழங்கினர்.

இதேவேளை, தெஹியத்தகண்டி ரங்ஹெலகம, ஸ்ரீ ஸ்வர்ணபிம்பேராம விகாரைக்குச் சென்ற குறித்த குழுவினர், விகாராதிபதியினை சந்தித்து கலந்துரையாடியதுடன் அங்கு தங்கியிருந்த மக்களையும் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினர். இந்த மனிதாபிமானப் பணியில், தெஹியத்தகண்டிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி.மசூத், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாட், சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரீ.எம்.இன்ஷாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் அதன் கீழ் இயங்கும் சுகாதார நிறுவனங்களினது கூட்டுப்பங்களிப்புடன், இந்த நிவாரணப் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.