ஸலாம் எனும் இனிய வாழ்த்து...!


 


“உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்து கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது குறைந்தது அதைப்போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்.” (குர்ஆன் 4:86)இஸ்லாமிய வாழ்வியல் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது எப்படி முகமன் கூறவேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. அதுதான் “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்) எனும் வாழ்த்து. வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் கட்டத்திலும், இன்பமான நேரங்களிலும், துயரத்தின்போதும் இந்த வாழ்த்தைச் சொல்லமுடியும். இது ஒருபுறம் வாழ்த்து, இன்னொரு புறம் பிரார்த்தனையும் ஆகும். மரணம் அல்லது நோய் பாதித்த வீட்டிற்குச் செல்லும்போதுகூட அங்குள்ளவர்களுக்கு நம்மால் ஸலாம் சொல்லமுடியும்.

ஏனெனில் அது ஒரு பிரார்த்தனையாகவும் இருப்பதால்.ஓர் இறை நம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளரைப் பார்த்து “உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்” என்று சொல்லும்போது தெளிவான வாக்குறுதி ஒன்றையும் அளிக்கிறார்.அது என்ன வாக்குறுதி?“என் கைகள் மூலமாகவோ என் செயல்கள் மூலமாகவோ உங்களுக்கு எந்தத் தொல்லையும் அளிக்கமாட்டேன். சாந்தியும் அமைதியும் உங்கள் வாழ்க்கையில் நிலவ உதவியாக இருப்பேனே தவிர, ஒருபோதும் உங்கள் நிம்மதியைக் குலைக்கும் வகையில் தொல்லை தரமாட்டேன்.”அதனால்தான் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: உங்களிடையே ஸலாமைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அது அன்பை வளர்க்கும்.”ஒருமுறை தோழர் ஒருவர் அண்ணல் நபிகளாரிடம், “மார்க்கத்தில் சிறந்த செயல் எது?” என்று கேட்டார்.

அதற்கு நபிகளார், “பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதும், அறிந்தவர்கள் - அறியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் - முகமன் கூறுவதும் ஆகும்” என்று கூறினார். மார்க்க அடிப்படையில் ஸலாம் கூறுவது நபி வழியாகும். ஒருவர் ஸலாம் கூறிவிட்டால் அதற்குப் பதில் அளிப்பது கடமையாகும். பதில் கூறாமல் இருப்பது குற்றமாகும். சிலர் நாம் ஸலாம் கூறினால் வாய் திறந்து பதில் கூற மாட்டார்கள். கையைத் தூக்கிக் காட்டுவார்கள் அல்லது தலையை மட்டும் அசைப்பார்கள். இது தவறாகும். நன்றாக வாய் திறந்து பதில் ஸலாம் கூற வேண்டும்.“அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்) என்று மட்டும் கூறினால் பத்து நன்மைகள் கிடைக்கும். ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி’ (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் கருணையும் பொழியட்டும்) என்று கூறினால் இருபது நன்மைகள் கிடைக்கும்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’(உங்கள் மீது இறைவனின் சாந்தியும் கருணையும் அருள்வளமும் பொழியட்டும்) என்று கூறினால் முப்பது நன்மைகள் கிடைக்கும். இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான நபிமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. (திர்மிதீ, அபூதாவூத்) இரண்டு நண்பர்கள் அல்லது இரண்டு சகோதரர்கள் சண்டை போட்டுக்கொண்டு நாள் கணக்கில் வாரக்கணக்கில் பேசாமல் இருப்பார்கள். “இத்தகைய கோபதாபங்களை எல்லாம் மூன்று நாட்களுக்குள் தீர்த்துக்கொள்ளுங்கள். சண்டை போட்டுக்கொண்ட இரு சகோதரர்களில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே இறை வனின் பார்வையில் சிறப்புக்குரியவர்” என்று கூறுகிறது  இஸ்லாமிய வாழ்வியல்.  இறைத்தூதர் காட்டிய இனிய வழியில் அனைவருக்கும் ஸலாம் சொல்லி இறைவனின் அருளைப் பெறுவோம். மனிதர்களின் அன்பையும் பெறுவோம்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

RELATED STORIES:

>

Post a Comment

[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.