யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த அரசையா என அனைவராலும் அழைக்கப்படுகின்ற, பன்முகக் கலைஞர் திருநாவுக்கரசு தனது 90 ஆவது வயதில், புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தமிழ்ப்பற்றாளராக அறியப்பட்ட அரசையா, தமது இளமைக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் அபிமானியாக இருந்தார். கட்சி நடத்திய சட்டமறுப்பு உண்ணாவிரதப் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டார்.
பின்னாளில், அவர் மேடை நாடகங்களை எழுதும் எழுத்தாளராக, மேடை நாடக நெறியாளராக, திரைப்பட நடிகராக, புகைப்படக் கலைஞராக, வில்லுப்பாட்டுக் கலைஞனாக, சிற்பியாக, ஒப்பனைக் கலைஞனாக மிளிர்ந்தார் என்று பேராசிரியர் மௌனகுரு தெரிவித்தார்.
கடந்த நூற்றாண்டின் எழுபதுகளுக்கு முந்தைய காலகட்டங்களில் இவர் தனியாகவே நாடகங்களை இயக்கினார். அவற்றில், திப்புசுல்தான், வீரமனிதன், வீரத்தாய் போன்ற நாடகங்கள் ஓரளவிற்கு அன்னிய எதிர்ப்பையும், தமிழ் உணர்வையும் காட்டிய நாடகங்களாக பார்க்கப்பட்டன.
எழுபதுகளுக்குப் பின் இவரது நாடக வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டதாகக்கூறும் பேராசிரியர் மௌனகுரு, இந்தக் காலத்திலே அவர் ஒரு ஒப்பனைக் கலைஞராகவும் பரிணமித்து மிளிர்ந்ததாக தெரிவித்தார். அவரது இறுதிக் காலங்களில் ஒப்பனைக் கலைஞராகவே அவர் அறியப்பட்டார் என்று நினைவுகூர்ந்தார் பேராசிரியர் மௌனகுரு.

