இலங்கையின் புராதன சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று நாளை (22) இடம்பெறவுள்ளதாக பொது பலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இன்றைய மட்டு விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த 3ம் திகதி நாம் மட்டக்களப்பு விஜயம் செய்வது தடுக்கப்பட்டது. அங்கு சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதில் இருந்து கிராம உத்தியோகத்தர் சான்றிதல் பெறுவது வரை பிரச்சினை உள்ளது. அதன் வெளிப்பாடாகத் தான் சுமங்கள தேரர் ஆத்திரத்துடன் கோஷம் எழுப்புகிறார்.
நாம் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று மட்டக்களப்பில் உள்ள புராதன முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களை பார்வையிட்டோம். நாளைய தினம் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு ஜனாதிபதியுடன் புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பற்றிய ஒரு கலந்துரையாடல் உள்ளது. அங்கு இன்றைய விஜயத்தில் நாம் பெற்றுக்கொண்ட தரவுகளையும் அவரது கவனத்துக்கு கொண்டுவரவுள்ளோம்” என குறிப்பிட்டார்.

