புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது



உலகிற்கு சமாதானத்தை எடுத்தியம்பும் நத்தார் பண்டிகை நேற்று நள்ளிரவு உதயமாகியுள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இம்முறை மூன்று விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கந்தானை  புனித செபஸ்தியன் தேவாலயத்தில் பிரதான திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதேவேளை, கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயம் மற்றும் ஜா – எல கனுவன புனித ஜோசப் தேவாலயத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் என்பது வெறுமனே நடந்துமுடிந்ததை நினைவுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையக் கூடாது என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மாறாக மனித வாழ்வின் உண்மையான பெறுமதியை ஆழமாக உணர்ந்து, அதன் முழுமையை சமுதாயத்திற்கு சான்று பகரும் நிகழ்வாக அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் பண்டிகை தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே
இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் வகையில் நத்தார் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் எனவும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
மனித உயிரின் பெறுமதியையும் அதன் புனிதத்துவத்தையும்  தியானிக்கும் கிறிஸ்மஸ் காலத்தில், அதற்கு இடையூறாக அமையும்  கருச்சிதைவு, கொலைகள் மற்றும் அழிவுகளை வன்மையாக கண்டிப்பதற்கும் அனைவருக்கும் பேராயர் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவோர்  தொடர்பிலும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர்  பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை
வெளியிட்டுள்ளார்.