''எந்தக் கடினமான சூழலிலும் பலஸ்தீனுடன் கைகோர்ப்போம்'




பலஸ்தீன விடுதலையை உறுதிப்படுத்தி எந்த கடின மான சூழலிலும் பாலஸ்தீனுடன் கைகோர்ப்பதாக இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளதுடன் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஏற்றுகொள்ள முடியாது எனவும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
"உலகின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளி ! கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்" என்ற தொனிப்பொருளில் பலஸ்தீன் இலங்கை நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. 
இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் , மதத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 
நிகழ்வில் உரையாற்றிய பலஸ்தீன -இலங்கை நட்புறவு அமைப்பின் தலைவர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில், 
பலஸ்தீன நாட்டில் இன்று இடம்பெற்றுவரும் சம்பவங்கள், அழிவுகள், அடக்குமுறைகள் அனைத்திற்கும் எதிராக இலங்கை அரசாங்கம் மிக நீண்டகாலமாகவே குரல் எழுப்பி வருகின்றது. கடந்த காலங்களில் நாம் ஒரு குழுவாக பலஸ்தீனத்திற்கு சென்றோம். அங்கு இடம்பெறும் அழிவுகளை நாம் கண்களால் அவதானிக்க முடந்ததது. இஸ்ரேல் அரசாங்கதின் ஆக்கிரமிப்பு, இஸ்ரேல் இராணுவத்தின் அடக்குமுறை, பலஸ்தீன வேலைத்திட்டங்கள் அனைத்தையும் கைப்பற்றி அம்மக்களை அடிமைகளாக்க மாற்றும் செயற்பாடுகளே நாம் உணர்ந்தோம். இவ்வாறான நிலையில் இவர்களின் ஏகாதிபத்திய சக்தியை எதிர்த்து முழு உலகமுமே திரும்பியுள்ளது. 
பலஸ்தீன மக்கள் இன்று ஆயுதத்துடன் போராடவில்லை, கற்களை கொண்டும் சிறிய தடுப்பு ஆயுதங்களை கொண்டுமே அவர்கள் போராடி வருகின்றனர். இவற்றை உணர்ந்த எவருக்கும் பலஸ்தீனத்தை ஆதரிக்காது இருக்கவே முடியாது. இந்த உலகில் தனிமையாகும் இஸ்ரேல் அரசாங்கத்தை காப்பாற்ற இன்று அமெரிக்கா முன்னெடுக்கும் முயற்சிகளின் முக்கியமான ஒன்றாகவே இப்போது ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து நாடுகளுமே எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. மேலும் ஐக்கிய நாடுகள் சபை கூட இன்று அமெரிக்காவின் செயற்பாட்டை நிராகரித்து விட்டது. ஆகவே ஏகாதிபத்திய நாடுகளான இவை இரண்டு நாடுகளும் என்ன செய்தாலும் நாம் உலக நாடுகளுடன் கைகோர்த்து பலஸ்தீன உரிமைக்காகவும், சுதந்தரத்திற்காகவும் எந்தவொரு கடினமான சூழலிலும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.
 பலஸ்தீன -இலங்கை நட்புறவு அமைப்பின் செயலாளரும் ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக உரையாற்றுகையில், 
நடுநிலையாகவும், மனிதாபிமான ரீதியிலும் சிந்திக்கும் நாடுகளே உலகில் அதிகமாக உள்ளன என்பது தற்போது பலஸ்தீன விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசாங்கத்தின் அச்சுறுத்தலான செயற்பாடுகளை சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளாது உலக நாடுகள் அனைத்தும் நியாயத்தின் பக்கம் உள்ளன. இலங்கையும் அதனை நிருபித்துக்காட்டியுள்ளது. பலஸ்தீனத்தின் சுதந்திரம் இன்று பறிபோயுள்ளது என்றால் அதற்கு முதல் காரணம் ஐக்கிய நாடுகள் சபையேயாகும். கடந்த 50 ஆண்டுகளில் முழுமையான ஆதரவு இஸ்ரேலின் பக்கமே இருந்துள்ளது. பாதுகாப்பு சபையின் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் அனைத்துமே இஸ்ரேலின் பக்கமே இருந்துள்ளன. அதன் விளைவே இன்று பலஸ்தீனம் அழிந்து வரவும் காரணமாக அமைந்துள்ளது. எனினும் இன்று உலக நாடுகளின் நடுநிலையான செயற்பாடுகள் அமெரிக்காவை புறந்தள்ளியுள்ளது. ஆகவே பலஸ்தீன விவகாரத்தில் நாம் எப்போதும் ஆதரவு கரம் தூக்குவோம் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றார்.
அமைச்சர் ரவூப் ஹகீம் இங்கு உரையாற்றுகையில், 
ஜெருசலேம் என்பது மூன்று மதங்களின், இரண்டு இனத்தின் சொந்த பூமியாகும். அவ்வாறான பூமியினை ஒரு நவ்பர்களின் கைகளுக்கு கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. பலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் இலங்கைக்கு வந்த நிலையில் அவரை நான் சந்தித்தேன், அப்போது எனக்கு அவர் ஒரு விடயம் கூறினார், அதாவது யுத்தம் ஒன்றை முன்னெடுக்க நாம் கடுமையாக போராட வேண்டும், எனினும் சமாதானத்தை வெற்றிகொள்ள அதைவிடவும் அதிகமாக போராடவேண்டும் என அவர் எனக்கு கூறினார். இன்றும் அது என் மனதில் உள்ளது. சமாதான நோக்கத்தில் தான் பலஸ்தீன அரசாங்கம் செயற்பட்டது. எனினும் இன்று சமாதானம் என்ற கனவு துண்டுகளாக சிதறியுள்ளது. இன்று பலஸ்தீனம் சமாதானம் என்ற கனவினை மறந்துவிட்டது. 
அமெரிக்காவின் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலான பேச்சுக்களையும் கவனத்தில் கொள்ளாது சர்வதேச நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து வாக்களித்துள்ளன. இதுவே பலஸ்தீன் மீதான உலக நாடுகளின் ஒற்றுமையான ஒத்துழைப்புகள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எந்த நிலைமையில் பலஸ்தீனத்தை ஆதரிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.