மஹிந்தவை வெளியேற்றவே தமிழ் மக்கள் மைத்திரியை ஜனாதிபதியாக்கினார்கள்

இலங்கையில் நடந்து முடிந்த சம்பவங்களினால் நாட்டில் உள்ள பலர் இலங்கைக்கு அரசியலமைப்பு ஒன்று உள்ளதை அண்மையில் அறிந்து கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆவது நினைவுதினம் நேற்று (25) பிற்பகல் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மக்கள் தற்போது 19 ஆவது திருத்தம் என்ற ஒன்று வந்திருக்கின்றதை அறிந்து கொண்டுள்ளதாகவும் அதில் இருக்கின்ற சில உறுப்புரைகளை வீதியில் செல்லும் போது மக்கள் கதைத்து கொண்டிப்பதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலிலே மஹிந்த ராஜபக்ஷவுடைய கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திக்காத சந்தர்ப்பத்திலும் கூட தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலரை விலைக்கு வாங்கி பெரும்பான்மையை உருவாக்கி 18 ஆம் திருத்தத்தை நிறைவேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற உரையாடலின் போது தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்ததன் காரணமாக தான் ஜனாதிபதி ஆனேன். இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என ஜனாதிபதி அவரிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்த போது, தான் இதனை நீங்கள் அடிக்கடி சொல்கின்றீர்கள். ஆனால் 2010 ஆம் ஆண்டு தமிழ் மக்கள், இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தவர்கள். 2015 ஆம் ஆண்டு உங்களுக்காக வாக்களித்தார்கள். தமிழ் மக்கள் உங்கள் மீது கொண்ட அன்பினாலேயோ அல்லது சரத் பொன்சேகா மீது வைத்திருந்த அன்பினாலேயோ உங்களுக்கு வாக்களிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக தான் உங்கள் இருவருக்கும் வாக்களித்தாக ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அப்படி தொடர்ச்சியாக அன்றிலிருந்து இன்று வரை யாரை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களோ, அதே நபரை நீங்கள் கொண்டு வந்து பிரதமர் பதவியில் அமர்த்தியதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


--- Advertisment ---