எரிபொருளுக்காக QR முறைமை



இன்று (15) முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவிப்பு

இன்று காலை 6 மணி முதல் QR குறியீடு உள்ளவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


QR  இன்றி இனி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக கையிருப்பிலுள்ள எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

குறிப்பாக, எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைக்கும் மாஃபியாக்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

 

அதன்படி, ஏற்கனவே பதிவு செய்தவர்கள், வாகன உரிமையாளர் விபரம் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் இல்லை எனில், https://fuelpass.gov.lk  இணையத்தளத்தில் உங்கள் பழைய QR குறியீட்டைத் தரவிறக்கம் செய்யலாம்.

 

எனினும், வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருந்தால், இன்று காலை 6 மணி முதல் இணையதளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

 

புதிய வாகனங்கள் அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் இன்று காலை 6 மணி முதல் https://fuelpass.gov.lk  இணையத்தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

 

இந்த நிலையில், ஒவ்வொரு வாகன வகைக்கும் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு தொடர்பிலும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

 

அந்தவகையில், இன்று காலை முதல் அமுலுக்கு வரும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR  நடைமுறையின் கீழ், ஒவ்வொரு வாகன வகைக்கும் வாராந்தம் ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருள் அளவும் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதன்படி, பேருந்து 60 லீற்றர், மோட்டார் சைக்கிள், 5 லீற்றர், முச்சக்கர வண்டிகள் 15 லீற்றர், வேன் 40 லீற்றர், கார் 15 லீற்றர்

பாரவூர்தி 200 லீற்றர், விசேட தேவைக்கான வாகனங்கள், 40 லீற்றர் என்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

நாட்டில் இன்று அதிகாலை முதல் மீண்டும் QR  முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களிலும் வரிசையில் நீண்ட நேரம் மக்கள் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.