மாவனெல்லையில் தீய செயல்கள்: குற்றவாளிகளை உடன் கைதுசெய்!

“மாவனெல்லைப் பகுதியில் இனங்களுக்கிடையில் மத ரீதியாக முறுகல் நிலையை உருவாக்கும் சில மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது வேதனைக்குரியதாகும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
“இனங்களுக்கிடையில் சமாதானத்தைச் சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் இந்த நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக இனங்காணவேண்டியது அவசியமானதாகும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவனெல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சில நாசகார சக்திகளால் சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“புத்தரின் சிலைகளைச் சேதப்படுத்தி இந்நாட்டின் இன, மத நல்லிணக்கத்துக்கும், சமாதானத்திற்கும் சௌஜன்யத்திற்கும் வேட்டு வைத்திருக்கும் இந்த மோசமான அநாகரிக செயற்பாடு வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய தீய சக்திகளின் பின்னணி தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆராய்ந்து சரியான தகவல்களை விரைவில் வெளியிட வேண்டும்.
இத்தகைய தீய செயல்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இனங்களுக்கிடையில் அமைதியின்மையை உருவாக்கி, வன்முறைகளைத் தூண்டும் இத்தகைய மோசமான செயற்பாடுகளை இந்நாட்டில் வாழும் எல்லா சமூகத்தினரும் பக்கச்சார்பின்றி கண்டிக்க முன்வரவேண்டும்.
இதுவே இந்நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நேசிக்கும் மக்களின் வேண்டுதலாகும்.
இனவாதம் எந்த வடிவத்தில், எந்தத் தளத்தில், எந்த இனத்தில் இருந்து உருப்பெற்றாலும் அதனை எதிர்க்கவும், தகர்த்தெறியவும் நாம் வேறுபாடுகளின்றி ஒன்றிணைய வேண்டும்.
கடந்த காலங்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனவாத நடவடிக்கைகள் எமக்கு பலத்த இழப்புகளையும், இனங்களுக்கிடையிலான விரிசல்களையும் ஏற்படுத்தின என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
நாட்டில் இன விரிசல்களை உருவாக்கி இலாபமடைய காத்துக்கொண்டிருக்கும் குறித்த இனவாத சக்திகள், இனங்களுக்கிடையிலான நல்லுறவை சிதைக்கும் செயற்பாடுகளை அடிக்கடி அரங்கேற்றி வருகின்றன.
இத்தகைய செயற்பாடுகள் எமது நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கு விடுக்கப்படும் பாரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன.
இந்த வன்முறை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உண்மையான குற்றவாளிகளை வெகுவிரைவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தும் அரங்கேற்றப்பட்ட வன்முறை நாடகம் இன்று பௌத்தர்கள் புனிதமாக கருதும் புத்தர் சிலைகள் மீதான தாக்குதல்களாக மாறியிருக்கின்றன.
இந்த இனவாத செயற்பாடுகள் நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு பெரும் முட்டுக்கட்டையும் பின்னடைவுமென்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.
எமது முன்னேற்றத்திற்கு என்றும் தடையாக இருக்கும் இந்தத் தீய இனவாத, மதவாத நிலைப்பாட்டிலிருந்து நாம் விடுபடவேண்டும்.
இலங்கையர் என்ற ரீதியில் பிற்போக்குவாதத்தை தோற்கடித்து, எமது நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம்கொடுக்க முன்வரவேண்டும்” – என்றுள்ளது.


--- Advertisment ---