”கலப்பு நீதிமன்றத்தை நிறுவுக!”

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்புநாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கு உடனடியாக உறுப்புநாடுகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளர். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு திமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. 

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி. என். பகவதி தலைமையில் 16 மனித உரிமைமீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் உடலகம ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு அமைத்த முன்னணி நபர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீன குழுவை (International Independent Group of Eminent Persons - IIGEP)உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கலாம். 

ஐக்கிய நாடுகள் சபையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட காலம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 21.03.2019 அன்று உறுப்பு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் 40/L.1 என்ற தீர்மானத்தினை நிறைவேற்றி இருப்பது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது. 

இனப்படுகொலை புரிந்து எமது பெண்களை நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்தை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பிரேரணைக்கு சார்பாக செயற்பட்டமையும் வேதனையை அளிக்கின்றது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
--- Advertisment ---