தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 90 வீதமானவர்கள் வியாபாரிகளே

உயிர்களை கொடுத்த போராளிகளை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு நாள் கூட உண்ணாவிரதம் இருக்க முடியவில்லை. 

இவர்கள் அரசியல்வாதிகள் இல்லை. வியாபாரிகளே, எனவே போராட்ட காலத்தில் இருந்த அனைத்து இயக்கங்களும் கடந்த கால மோதல்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். 

யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, 

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 90 வீதமானவர்கள் வியாபாரிகளே உள்ளனர். அதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். தங்களின் சுய வியாபாரங்களில் ஈடுபட்டவர்கள் இப்போது மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு திரிகின்றனர். 

இவ்வாறான வியாபாரிகளை இலங்கை அரசும் முக்கிய சந்தர்ப்பங்களில் ஏலத்தில் விலை கொடுத்து எடுப்பது போல அதிகளவான நிதிகளை கொடுத்து விலைக்கு வாங்குகின்றது. போராட்டத்தால் பாதிப்படைந்த எமது மக்கள் இவர்களுக்கு வாக்களித்து விட்டு இவர்களை நம்பி இப்போது நடுத்தெருவில் கோவணத்துடன் நிற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

எனவே வியாபாரிகள் சொகுசானவர்களை மக்கள் புறம் தள்ளி உண்மையாக மக்களுக்காக போராடியவர்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும். எனவே போராட்ட காலத்தில் இருந்த அனைத்து இயக்கங்களும் மக்களுக்காகவே உருவானது. ஆகவே அனைத்து இயக்கங்களும் கடந்த கால மோதல்களை மறந்து ஒன்றிணைய வேண்டும். 

இலங்கை அரசினை பொறுத்த வரையில் மகிந்தவும் ரணிலும் ஒரே மாதிரியானவர்கள் தான். ஏனெனில் மகிந்த நேரடியான இனவாதி ஆனால் ரணில் விக்ரமசிங்க போர்வை போட்ட இனவாதி. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமக்கு எதுவும் உருப்படியாக கிடைக்க போவதில்லை. தற்போது எமக்கு இருக்கின்ற மாகாண சபையையும் தவற விடுவோமேயானால் எமக்கான அதிகாரம் என்று எதுவுமே இருக்காது என்றார். 

(யாழ். நிருபர் பிரதீபன்)


--- Advertisment ---