#AbDevillers முதல் 25 பந்தில் 100... அடுத்த 19 பந்தில் 300... மிஸ்டர் 360-ன் மிரட்டல் ஸ்ட்ரைக் ரேட்!




ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் (#RCBvKXIP) போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. தோள்பட்டை வலி காரணமாக ஸ்டெய்ன் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக டிம் செளதி வாய்ப்பு பெற்றார். ஒரு வழியாக வாஷிங்டன் சுந்தருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. பஞ்சாப் சார்பில் பூரண், ராஜ்புட் அணியில் இடம்பிடித்தனர். டாஸ் வென்ற பஞ்சாப், ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

பார்த்திவ் படேலுடன் ஓபனிங் இறங்கிய ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி (13 ரன்), தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சொதப்பினார். ஆனால், மறுமுனையில் பார்த்திவ் வழக்கம் போல பவர்பிளேவில் வெளுத்து வாங்கினார். குறிப்பாக, முகமது ஷமி வீசிய பவர்பிளேவின் கடைசி ஓவரில் 3 பௌண்டரி 1 சிக்ஸர் என அடித்து நொறுக்கினார். ஆனால், பவர்பிளே முடிந்த அடுத்த இரண்டாவது பந்திலேயே முருகன் அஷ்வின் பந்தில் அவுட்டானார். வழக்கம்போல தன் பங்குக்கு 43 ரன்கள் சேர்த்து, ஓபனிங் பேட்ஸ்மேனின் கடமையை முடித்துச் சென்றார் பார்த்தீவ்.

#RCBvKXIP

மொயின் அலி இந்த சீசனில் டாப் ஆர்டரில் இறங்கிய போட்டிகளில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் என்பதால், அவரை நான்காவது பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதேபோல, அவர் நான்காவதாக இறங்கினார். ஆனால், ரவிச்சந்திரன் அஷ்வின் தன் முதல் பந்திலேயே மொயீன் அலியை போல்டாக்கி, செக் வைத்தார். இதுதான் இந்த சீசனில் மொயீன் அலியின் கடைசி ஐ.பி.எல் போட்டி. ஆக்ஷ்தீப் நாத் வந்த வேகத்தில் வெளியேறிவிட, 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது ஆர்.சி.பி.

வழக்கத்தை விட ஏ பி டி வில்லியர்ஸ் ஆட்டத்தில் மாற்றம் தெரிந்தது. ஸ்கோர் லைன் என்னவாக இருந்தாலும், தன் இயல்பான ஆட்டத்தைத்தான் ஆடுவார் ஏபிடி. ஆனால், நேற்று அப்படியில்லை. நிதானமாக இருந்து பின்னர் அடித்துக் கொள்ளலாம் என தீர்க்கமாக இருந்தார். அநாவசியமாக எந்தவொரு தவறான ஷாட்டும் ஆடவில்லை. அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸும் நிதானமாக இருக்க, 10, 11, 12, 13-வது ஓவர்களில் ஒரு பௌண்டரி கூட அடிக்கவில்லை. டி வில்லியர்ஸ் 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 100. இது ஏபிடி-யின் இயல்பே இல்லை. மறுமுனையில் ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தார்.  

#RCBvKXIP

ராஜ்புட் வீசிய 15-வது ஓவரில் கியரை மாற்றினார் ஏபிடி. ஷார்ட் லென்த்தில் விழுந்த பந்தை பௌண்டரிக்கு அனுப்பிவிட்டு, பேக் ஆஃப் லென்த்தில் விழுந்த அடுத்த பந்தை மிட் விக்கெட் பக்கம் சிக்ஸர் பறக்கவிட்டபோது, ஆர்ப்பரித்தனர் ஆர்.சி.பி ரசிகர்கள். முருகன் அஷ்வினின் கடைசி ஓவரில் மிட்விக்கெட் ஏரியாவில் மீண்டும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், ரவிச்சந்திரன் அஷ்வினின் ஓவரில் ஏபிடி, ஸ்டாய்னிஸ் இருவருமே அடக்கி வாசித்தனர். அஷ்வினின் கடைசி ஓவரில், கடைசி பந்தில் ஏபிடி ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சி செய்தார். நல்லவேளை ரன்னும் வரவில்லை, அவர் அவுட்டும் ஆகவில்லை. அடுத்து, வில்ஜோயன் ஓவரில் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து டி வில்லியர்ஸ் அரைசதம் கடந்தார். ஸ்ட்ரெய்ட்டில் பறந்த அந்த சிக்ஸருக்கே சில்லறையைச் சிதறவிடலாம். அப்படியொரு ஷாட் அது.

#RCBvKXIP 

ஒரு கட்டத்தில் 180 ரன்கள் வந்தாலே நல்ல ஸ்கோர் என்ற நிலை இருந்தது. ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் ஏபிடி, ஸ்டாய்னிஸ் இருவரும் பிரித்து மேய்ந்து விட்டனர். 19-வது ஓவரை வீச வந்த முகமது ஷமியின் பந்தில் ஈவு இரக்கமே இல்லாமல் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார் ஏபிடி. பேக் ஆஃப் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை லாங் ஆஃப் பக்கம் ஓர் இழுப்பு இழுத்தார். சிக்ஸர். அடுத்த பந்தும் அதே லென்த், அதே லைன். அதே ஷாட், அதே இடத்தில் சிக்ஸர். டி வில்லியர்ஸை ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டுப் போன, ஷமி அடுத்த பந்தை ஃபுல் டாஸாக வீசினார். டி வில்லியர்ஸ் தடுமாறிக் கொண்டே அந்த ஃபுல் டாஸை அதே வேகத்தில் திருப்பி விட்டார். பந்து பேட்டின் மிடிலில் பட்டு எங்கோ பறந்தது. இதுவே, வேறு ஒரு பேட்ஸ்மேனாக இருந்திருந்தால் நிலை குலைந்திருப்பார். ஏபிடி சாதாரண பேட்ஸ்மேன் இல்லை. ஏலியன். இத்தனைக்கும் இடது கையில் மட்டும்தான் முழு பவரையும் கொடுத்தது போல இருக்கும், அப்படி இருந்தும் பந்து ஸ்டேடியத்தைத் தாண்டிப் பறந்தது. தலை சொறிந்து நின்றார் ஷமி; இரு கைகளையும் பக்கவாட்டில் அசைத்து ஏதோ சமிக்ஞை செய்தார் கிறிஸ் கெய்ல். டிரெஸ்ஸிங் ரூமில் கோலி எப்படியிருந்திருப்பார் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வில்ஜோயன் வீசிய கடைசி ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு ஏபிடி ஆரம்பித்து வைக்க, கடைசி நான்கு பந்துகளில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி வெளுத்து விட்டார் ஸ்டாய்னிஸ். அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள். ஆர்.சி.பி-யின் ஸ்கோர் 202. தேங்ஸ் டு ஏபிடி - ஸ்டாய்னிஸ். முதல் 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த டி வில்லியர்ஸ், அடுத்த 19 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 100-லிருந்து 300-ஐ தாண்டி எகிறியது. 

#RCBvKXIP - AB De villiers

இமாலய ஸ்கோரை சேஸிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய கிறிஸ் கெய்ல் - ராகுல் ஜோடி, பவர்பிளேவில் வேண்டிய ரன்களை எடுத்தது. டிம் செளதி, உமேஷ், சைனி என மூன்று வேகப்பந்துவீச்சாளர்களின் பந்தும் அடித்து நொறுக்கப்பட்டது. உமேஷ் வீசிய நான்காவது ஓவரில் இன்னுமொரு சிக்ஸருக்கு ஆசைப்பட்டு லாங் ஆனில் இருந்த டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்தார் கெய்ல். 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து கெய்ல் நடையைக் கட்ட, பொறுப்பு கே.எல்.ராகுல் பக்கம் வந்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த மயங்க் அகர்வால் - ராகுல் ஜோடி பொறுப்புணர்ந்து, 2-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. ஆனால், மயங்க் அகர்வால் விக்கெட்டை எடுத்து பார்ட்னர்ஷிப்பைப் பிரித்து வைத்தார் ஸ்டாய்னிஸ். அடுத்த ஓவரில் மொயீன் அலி முதல் பந்திலேயே ராகுல் (42 ரன்) விக்கெட்டை எடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

#RCBvKXIP

டேவிட் மில்லர் உடன் ஜோடி சேர்ந்த பூரன், வாஷிங்டன் சுந்தர் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் வெளுத்து, ஆர்.சி.பி ரசிகர்களை கதி கலங்க வைத்தார். முதலிரண்டு ஓவர்களை கட்டுக்கோப்புடன் வீசிய மொயீன் அலி, மூன்றாவது ஓவரில் சேர்த்துவைத்து ரன் கொடுத்து விட்டார். லாங் ஆன், லாங் ஆஃப் என கேட்ச் பிடிக்க ஏதுவாக டி வில்லியர்ஸ், கோலி காத்திருந்தும் சிக்ஸர்கள் பறந்தது. `பெளலிங் இந்த லட்சணத்துல இருந்தா, இவங்க 200 ரன் அடிச்சி என்ன புண்ணியம்’ எனப் புலம்ப ஆரம்பித்து விட்டனர் ஆர்.சி.பி ரசிகர்கள். 

சென்னைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கிய உமேஷ் யாதவ், இந்தமுறை 18-வது ஓவரை உருப்படியாக வீசினார். 6 ரன்களே விட்டுக்கொடுத்தார். 12 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலை. சைனி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர், கடைசி பந்தில் பூரன் அவுட்டாக, ஆர்.சி.பி நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இருந்தாலும், கடைசி ஓவர் உமேஷ் யாதவ் வீச வருகிறார் என்றதும் கொஞ்சம் பதற்றம் இருந்தது. அதற்கேற்ப முதல் பந்திலேயே அஷ்வின் ஸ்ட்ரெய்ட்டில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், அடுத்த பந்திலேயே அஷ்வினை அவுட்டாக்கி விமோசனம் தேடிக் கொண்டார் உமேஷ். கிங்ஸ் லெவன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்.சி.பி 17 ரன்களில் வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#RCBvKXIP

கடைசியாக விளையாடிய ஐந்தில் நான்கு போட்டிகளில் வென்று, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது ஆர்.சி.பி!