கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு இரண்டு மாடி கட்டிடம்?






(க.கிஷாந்தன்)  
மிகவிரைவில் கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு இரண்டு மாடி கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டப்படும். அது மாத்திரமின்றி அங்குள்ள இன்னும் சில குறைபாடுகளையும் எனது அமைச்சின் மூலமாக நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் (02.04.2019) அன்று செவ்வாய்க்கிழமை அட்டன் டண்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பயிற்சி கலாசாலையின் அதிபர் திருமதி சந்திரலேகா தலைமையில நிகழ்வுகள்; நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய  விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்
மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பாரிய ஒரு பங்களிப்பை செய்துவருவதை நாம் மறந்து விட முடியாது.அதற்கு காரணம் அங்கு பயிற்சி பெறுகின்ற ஆசிரிய மாணவர்கள் சிற்நத பயிற்சிகளை பெற்றுக் கொண்டு வெளியேறிய பின்பு எங்களுடைய மலையக பாடசாலைகளிலேயே அதிகமாக கடமையாற்றுகின்றார்கள்.அவர்கள் பாடசாலையில் சென்று சிறப்பாக செயற்படுவதை காண முடிகின்றது.அதற்கு காரணம் இங்கு திறமையான அதிபரும் விரிவுரையாளர்களும் இருக்கின்றமையே.எனவே இந்த ஆசிரியார் கலாசாலையை அனைத்து வளங்களையும் வழங்கி அபிவிருத்தி செய்வதன் மூலமாக எங்களுடைய மலையக கல்வியையும் அபிவிருத்தி செய்ய முடியும்.
ஒரு காலத்தில் இந்த ஆசிரியர் கலாசாலை ஒரு பாழடைந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றிலேயே செயற்பட்டு வந்தது.இதன் காரணமாக அங்கு பயிற்சி பெற்ற ஆசிரிய மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வந்தார்கள்.இதன் காரணமாக இந்த ஆசிரியல் பயிற்சி கலாசாலையை மூடிவிடலாம் என்ற நிலைப்பாட்டிற்கும் அதிகாரிகள் வந்தார்கள்.ஆனால் நான் மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கு வளங்களை வழங்கி புதிய கட்டிடங்களை வழங்கி செயற்பட வைத்ததன் காரணமாக இன்று ஆசிரியர்களை பயிற்றுவிப்பதில் சிறந்த ஒரு கலாசாலையாக கொட்டகலை விலங்குகின்றது.
அது மட்டுமல்லாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றார்கள்.இந்த ஆசிரியர் கலாசாலை முன்னேற்றமடைவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.எனவே இந்த கலாசாலையில் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து அதன் பலன்களை எங்களுடைய பிள்ளைகளுக்க கிடைக்கச் செய்ய வேண்டும்.மலையகத்தை பொறுத்த அளவில் வளங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.எனவே அந்த வளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.