மட்டக்களப்பில் மைத்திரி


நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டம் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (12) முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்  இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதியின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பல்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். 

அரச நிறுவனங்களினால் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து, அரச பொறிமுறையின் மூலம் உயர்ந்த வினைத்திறனுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. 

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் கடந்த மாதம் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்றது. 

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெரும் மக்கள் ஆதரவு கிடைக்கப் பெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டம் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இடம்பெறவுள்ளன. 

இதேநேரம் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் இன்றைய தினம் ஜனாதிபதியால் மட்டக்களப்பு நகரத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு