”ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தும் அங்கு ஒரு மெட்டல் டிடெக்டர்கூட இல்லை"


இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊரான பெங்களூருவுக்கு கொண்டு வரப்படுகின்றன. அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இலங்கையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் அவர்கள் கோபத்தில் உள்ளனர்.
"பாதுகாப்பை உறுதி செய்யாததற்கு இலங்கை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தும் அங்கு ஒரு மெட்டல் டிடெக்டர்கூட இல்லை" என்று பிபிசி இந்தியிடம் பேசிய அபிலாஷ் லக்ஷ்மி நாராயணன் தெரிவித்தார்.
அபிலாஷின் தந்தை லக்ஷ்மி நாராயணன், பெங்களூரு அருகே உள்ள நெலமங்களாவின் முன்னாள் தாலுக்கா தலைவராவார். இவரும், இவரது கட்சியை சேர்ந்த மற்ற ஏழு பேரும், ஏப்ரல் 18ஆம் தேதி வாக்களித்து விட்டு விடுமுறைக்காக கொழும்புவிற்கு சென்றனர்.
லக்ஷ்மி நாராயணனின் மொத்த குடும்பமும், மேலும் பலரும், ஒரு கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தனர். அங்குதான் அவர்களது அன்புக்குரியவர்களின் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை குண்டுவெடிப்புபடத்தின் காப்புரிமைIMRAN QURESHI
அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் பிரதமர் தேவே கௌடா மற்றும் கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர் வந்திருந்தனர். இலங்கை தாக்குதல்களில் உயிரிழந்த 11 இந்தியர்களில், எட்டு பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள்.
இலங்கை குண்டுவெடிப்புபடத்தின் காப்புரிமைIMRAN QURESHI / BBC
"என் தாயார் அதிர்ச்சியில் உள்ளார். அவரால் பேச முடியும் என்று கூட எனக்கு தோன்றவில்லை. என் அப்பா மிகவும் கஷ்டப்பட்டார். வரும் காலங்களில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று, எங்கள் தொழிலைக்கூட நான் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன்" என்கிறார் பல் மருத்துவரான மஞ்சுநாத்.
பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஆர் விஸ்வநாத், தனது உறவினர் நாகராஜ் ரெட்டியை தேடவும், இச்சம்பவத்தில் காயமடைந்த புருஷோத்தமன் ரெட்டியை பார்க்கவும் கொழும்பு விரைந்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதே கருத்தை முன்வைக்கிறார்.
"இவ்வளவு பெரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னும் வண்டிகளில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் விமான நிலையத்தில் வெகு சில ராணுவ போலீஸார் மட்டுமே உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று இங்கு வந்தோம். ஆனால், முக்கிய இடங்களில் கூட ஒரு சில போலீஸார் மட்டுமே உள்ளனர்" என்று விஸ்வநாத் தெரிவித்தார்.
இலங்கை குண்டுவெடிப்புபடத்தின் காப்புரிமைIMRAN QURESHI / BBC
"நாங்கள் கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு (அவரது உறவினர்கள் தங்கியிருந்த இடம்) சென்றபோது, அங்கு மெட்டல் டிடெக்டர் இருந்தது, ஆனால் எங்களை பரிசோதிக்க யாருமில்லை. உலகில் முக்கிய சுற்றுலாத்தளமான அங்கு பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
நாகராஜ் ரெட்டி மற்றும் புருஷோத்தம் ரெட்டி இருவரும், காலை உணவு அருந்த கிங்ஸ்பரி ஹோட்டலின் கீழ் தளத்திற்கு சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த புருஷோத்தம் ரெட்டி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
தனது உறவினரான சிவண்ணாவில் உடலை வாங்க கொழும்பு சென்றார் சிவகுமார்.
"மருத்துவமனைகளில் அதிக குளிர்சாதன பெட்டிகள் இல்லாததால், உடல்கள் விரைவாக அழுகத் தொடங்கின. மேலும் உடல்கள் மோசமாக காயமடைந்திருந்ததால் அவற்றை முழுவதுமாக மூட வேண்டியிருந்தது" என்று தெரிவித்தார்.