பண்சேனை புண்படுகிறது, பாதுகாப்பான பாதையின்மையால்


மேலே உள்ள புகைப்படம் கடந்த புதன்கிழமை "நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் கால்பந்து அணிகளுக்காக வழங்கப்பட்ட சிறப்புப் பயிற்சிக்காக பன்சேனை பாரி வித்தியாலய மகளிர் கால்பந்து வீராங்கனைகள் வந்த போது பிடிக்கப்பட்ட படம்.

இவர்கள் தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துத்தரும் ஒரு அணியினர். ஆனால், இப்படியான வாகனத்தில் வந்து பயிற்சியை பெற்றுச் செல்ல வேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.

முதலாவது கேள்வி, நகரப் பகுதிகளில் இருக்கும் பாடசாலைகளில் கற்கும் மாணவிகளை இப்படி பயணம் செய்ய அவர்களது பெற்றோரோ அல்லது ஆசிரியர்களோ அனுமதிப்பார்களா?

இப்படியான ஒரு அபாயகரமான பயணத்தை இவர்கள் மேற்கொள்வதன் பின்னணியில் இவர்களது ஊக்கம் முக்கிய காரணமாக இருந்தாலும், இந்தப் பயணம் இவ்வளவு ஆபத்தானதாக இருப்பதை தடுக்க மாவட்ட மட்டத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டியுள்ளது.

பன்சேனை மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் ஒரு ஊர். விளைச்சல்காலங்களில் யானைகளின் தாக்கங்களை எதிர்கொள்ளும் கிராமம். ஆனால், இந்த ஊருக்கான பயணத்தில் காஞ்சிரங்குடாவில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர்களுக்கு சரியான வீதி கிடையாது. கரடுமுரடான, மிகவும் ஆபத்தான பாதையில் பயணம் செய்துதான் இவர்கள் ஊர் போய்ச் சேரவேண்டும்.

அதுமாத்திரமன்றி அந்தப் பகுதிக்கு தனியார் பஸ் போக்குவரத்து மாத்திரமே உண்டு. அரச போக்குவரத்து வாகன சேவை கிடையாது.

தனியார் பஸ் கூட காலை 8 மணிக்கு புறப்பட்டுத்தான் அங்கிருந்து வரும். ஆகவே காலை 8.30 மணிக்கு நகரிலோ அல்லது கொக்கட்டிச்சோலையை அண்மித்த இடங்களிலோ நடக்கக்கூடிய எந்த நிகழ்விலும் கலந்துகொள்வதாயின், இந்த மாணவிகளுக்கு இப்படியான போக்குவரத்துச் சாதனங்களை நாடுவதை விட வேறு வசதி கிடையாது. இந்த ஊர் இப்படியான சூழலில்தான் போர் முடிந்த கடந்து 10க்கும் அதிகமான வருடகங்களாக இருந்து வருகிறது என்பது எவருக்கும் தெரியாது என்றெல்லாம் கூறமுடியாது.

இதில் இன்னுமொரு முக்கிய விடயம் இந்த பள்ளிக்கூடம் மட்டக்களப்பின் பெருமையை, கிழக்கு மாகாணத்தின் பெருமையை கடந்த சில வருடங்களாக தேசிய மட்டத்தில் நிலைநாட்ட முயற்சிக்கும் சிறுமிகள் கற்கும் பாடசாலை. இவர்களுக்கான போக்குவரத்தின்மை இவர்கள் எதிர்நோக்கும் முதலாவது சவால். அது அவர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவும் உள்ளது. இந்தத்தடையைக் கடந்து வராவிட்டால் இவர்களால் எப்படி தேசிய மட்டத்தில் மற்றவர்களோடு நிகராக போட்டி போடமுடியும்?

படுவான்கரையின் பல இடங்களுக்கு போக்குவரத்து சரியில்லை என்பது எமக்கும் தெரியும். அங்கும் அந்த வகையிலான வசதிகள் தேவைதான். ஆனால், தேசிய மட்டத்தில் சாதிக்கத்துடிக்கும் பெண்களுக்கு, மட்டக்களப்புக்கு பெருமை தேடித்தர முயலும் ஒரு பிந்தங்கிய கிராமப் பிள்ளைகளுக்கான ஆபத்தான போக்குவரத்தை தவிர்க்க நாம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்?

ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தரும் நேரம் இது. அதனை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றோடு இல்லாவிட்டாலும், ஜனாதிபதியின் வருகையின் போது அதிகாரிகள் அல்லது பொதுமக்கள் இந்த விடயத்தை அவர் முன் வைத்து இந்தப் பன்சேனைக்கான போக்குவரத்துப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணமுன்வரவேண்டும்.

'மட்டக்களப்புக்கு விரைவில் இத்தனை கோடியில் வீதித்திட்டம் வருகின்றது. அப்போது பன்சேனைக்கும் வரும்' என்ற சாக்குப் போக்கெல்லாம் எமக்குத் தேவையில்லை. இந்த சிறுமிகளின் பயணப் பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை அவசியம்.

துணிச்சலும் அக்கறையும் உள்ளவர்கள் ஜனாதிபதியிடம் இந்த விடயத்தை கொண்டு சொல்லுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் யாரும் இதனை செய்யலாம். இல்லாவிட்டால் நாம் செய்வோம்.
அன்புடன்
சீவகன் பூபாலரட்ணம்