சிவாஜிலிஙக்கத்துக்கு அழைப்பாணை


தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடியது மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக வல்வெட்டித்துறை போலீசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு நவம்பா் மாதம் 26ம் தேதியன்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஒரு குழுவினர் முயற்சித்திருந்தனர்.
பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு
எனினும், அப்போது பிறந்தநாள் நிகழ்வினை செய்யவிடாமல் வல்வெட்டித்துறை போலீசார் அதனை தடுத்திருந்ததுடன், வழக்கு பதிவு செய்வோம் என போலீசார் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம், பதாகைகள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதற்கான கேக் ஆகியன வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் உறுப்பினர் ஒருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கான அழைப்பாணையை வல்வெட்டித்துறை போலீசார் அவர்களுக்கு வழங்கியுள்ளனா்.
பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு
இந்த அழைப்பாணையின் பிரகாரம் எதிர்வரும் 31ம் தேதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவா் கோ.கருணானந்தராசா, மற்றும் நகரசபை உறுப்பினா் பொ.சிவஞானசுந்தரம் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்தினை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கம் உள்ளிடவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.