வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று (19) சென்று காணாமல்போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்தும் உயிருக்கு போராடிய நிலையில் உயிருடன் இன்று (20) மீட்கப்பட்டதுடன் அந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது,
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது இரண்டரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று காலையில் வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்ததுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.
இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இதேவேளை குறித்த குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து தாய் மீட்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.
இதேவேளை இச் சம்பவத்தில் உயிர் தப்பிய தாய் தான் சம்பவதினம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டு ஈட்டு கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடைவில் இருந்த தங்க ஆபரணம் ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி வவுணதீவு கொத்தியாவலையில் உள்ள தனது வீட்டிற்கு பிரயாணித்து தாண்டியடி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து தற்போது விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிஸார், மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கனகராசா சரவணன்)


Post a Comment
Post a Comment