குழந்தைகளுக்கான பால் புட்டிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்


குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தும் புட்டிகளில், தடை செய்யப்பட்ட, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உடைய பிஸ்பினால்-ஏ என்ற மூலப்பொருள் பயன்படுத்தப்படுவது ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டுள்ளதாக டாக்சிக் லிங்க் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிஸ்பினால்-ஏ என்பது, பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்று. உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்க இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தயாரிக்கப்படும் பால் புட்டிகளில் இந்த வேதிப்பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என இந்திய தர நிர்ணய துறை, 2015ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
குழந்தைகளுக்கு பிஸ்பினால்-ஏ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாட்டில்கள் வழியாக உணவூட்டும்போது, அந்த உணவில் இந்த வேதிப்பொருள் நுண்ணிய வடிவில் கசிந்து உடலுக்குள் செல்வதால் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன என அறிய வந்துள்ளதால் இந்த உத்தரவிவை இந்திய தர நிர்ணய அமைப்பு பிறப்பித்தது.
உலக நாடுகள் பலவும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை இந்த வேதிப்பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புட்டிகளில் அடைத்து வைப்பதை தடை செய்துள்ளது.
ஆனால், இன்னும் இந்தியாவில் விற்கப்படும் பால் புட்டிகள் சிலவற்றில் பிஸ்பினால்-ஏ பயன்படுத்தப்படுவது தங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சமீபத்தில் டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது.
பால் பாட்டில்கள்படத்தின் காப்புரிமைBSIP/GETTY IMAGES
இது குறித்து பிபிசி தமிழிடம் 'டாக்சிக் லிங்க்' அமைப்பை சேர்ந்த பிரசாந்த் ராஜங்கர் பேசுகையில், "பிஸ்பினால்-ஏ நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும் வேதிப்பொருள். குழந்தைகள் உடலினுள் செல்லும் இந்த வேதிப்பொருள், உடலில் உள்ள ஒரு சில ஹார்மோன்களை தூண்டிவிடுவதன் வாயிலாக புற்றுநோய் செல்களை தோற்றுவிக்கின்றது. குறிப்பாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, மேலும் இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.?
குஜராத், ராஜஸ்தான், கேரளா, ஆந்திரப்பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து, பல நிறுவனங்களில் உற்பத்தியாகும் பால் பாட்டில்களில் 20 மாதிரிகளை எடுத்து கவுகாத்தி ஐ.ஐ.டி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, பாட்டில்களில் இருந்து உணவின் வழியாக பிஸ்பினால்-ஏ மூலக்கூறுகள் கசிந்து வெளியேறுவது உறுதியானது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 20 மாதிரிகளில், அனைத்திலும் முதல் கட்ட சோதனையில் உணவின் வழியாக பிஸ்பினால்-ஏ மூலக்கூறுகள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டது.
பால் பாட்டில்கள்படத்தின் காப்புரிமைBSIP/GETTY IMAGES
இரண்டாம் கட்ட சோதனையில் ஒரு மாதிரியினைத் தவிர அனைத்திலும் இந்த கசிவு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் மூலமாக இன்னும் இந்தியாவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான பால் பாட்டில்களில் பிஸ்பினால்-ஏ பயன்படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது" என்று பிரசாந்த் ராஜங்கர் கூறினார்.
ஆனால், இது ஆபத்தானது. புற்றுநோய், இனப்பெருக்க மண்டல பாதிப்பு, இதய நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் என பல பாதிப்புகள் இதன் மூலம் ஏற்படலாம். தடை செய்யப்பட்ட பின்பும் , சந்தையில் இவைகள் விற்பனைக்கு உள்ளது கவலைக்குரியது. அரசு தீவிரமாக இதனை கண்காணிக்க வேண்டும், நுகர்வோர்களுக்கும் தகுந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்கிறார் பிரசாந்த் ராஜங்கர்.