யாழ். பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்!




பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘நிரபராதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்’ என்று எழுதப்பட்ட பதாகையைத் தாங்கியவாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது.
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் கைதுக்கு எதிராக எழுதப்பட்ட பல சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக வளாகம் கடந்த 3ஆம் திகதி இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறை மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் இருந்தன எனக் குற்றம்சாட்டப்பட்டு மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
மாணவர்கள் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ள நிலையில், சட்டமா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.