இலங்கையில் ISIS இனை தடை செய்ய முடியுமா?


#CNN
ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்பிறகு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புகள் இரண்டை அரசாங்கம் தடை செய்திருந்தது. ஏன் ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்ய முடியாது என்ற கேள்விக்கு எவரும் பதில் கூற வில்லை. மாறாக அது ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்பு என்பதால் அதை இலங்கையில் ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.
குறித்த அமைப்பில் பயிற்சி பெற்றவர்களை கைது செய்வதற்குக் கூட சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை என பிரதமர் ரணில்  பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் தொலைகாட்சி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தமையை நாம் அறிவோம். ஏனெனில் தீவுக்கு வெளியே உள்ள ஒரு அமைப்பின் கீழ் பயிற்சி பெற்று நாட்டில் உள்ளவர்களை கைது செய்வதற்கு சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதே அதற்குக்காரணம்.
இதன் காரணமாகவே குறித்த அமைப்பில் இணைவதற்கு சிரியா உட்பட பல நாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள் சிலர் யார் என்றும் தெரிந்தும் அவர்களை கைது செய்யவும் விசாரணை நடத்தவும் முடியாது இருந்தது இலங்கை அரசாங்கம். எனினும் அந்த அமைப்பினால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து வந்த பிறகு அமைப்போடு தொடர்புடையவர்களை கைதுசெய்து வருவதுடன் அமைப்புகளையும் தடை விதித்திருக்கின்றது. எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்பது முக்கிய விடயம்.
சவால்கள்
வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளை தடை செய்வதில் உள்ள மிக முக்கியமான பிரச்சினை என்னவென்றால் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் அல்லது அங்கு தொழில் புரிந்து வருபவர்களாவர். கடந்த காலங்களில் இவ்வாறு தடை செய்த நாடுகளைச் சேர்ந்தவர்களை மிக கொடூரமான முறையில் கொலை செய்து வந்த அமைப்பே ஐ.எஸ்.ஆகும். சிரச்சேதம் செய்தல் ,துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொல்லுதல், உயிருடன் கழுத்தை அறுத்து கொலை செய்தல் என இவர்களின் கொடூரச்செயல்கள் அதிகரித்து வந்தன. ஆகவே மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் தொழில் புரிந்து வரும் இலங்கையர்கள் ,மற்றும் அங்கு குடியேறியோர், உல்லாசப்பயணங்களை மேற்கொள்வோர் என அனைவரினதும் பாதுகாப்பு குறித்து தற்போது இலங்கை சிந்திக்க வேண்டியுள்ளது.
தமது செயற்பாடுகளை முன்னெடுக்க இவ்வாறானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து காரியத்தை சாதிக்கும் செயற்பாடுகளையும் இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய மத அடிப்படைவாத குழுக்களாக இருக்கும் எல்லா அமைப்புகளுமே இவ்விடயத்தில் ஒரே பாணியில் செயற்படுவதாலேயே பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இக்குழுக்களுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி ஜேர்மன் ஊடகம்
2014 ஆம் ஆண்டு தனது நாட்டில் ஐ.எஸ் அமைப்பை தடை செய்தது ஜேர்மன். இந்நாட்டு  ஊடகம் ஒன்று கடந்த வாரம் இலங்கை தாக்குதலை தொடர்பு படுத்தி உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களின் விளைவுகள் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வரைந்திருந்தது. இதன் படி  2001 ஆம் ஆண்டு நியூயோர்க் இரட்டை கோபுரத் தாக்குதலிலிருந்து இது வரை இஸ்லாம்  மதத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகள் உலகெங்கினும் 31,221 தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் இதன் மூலம் 146,811 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
தாக்குதல்களை நடத்தாது வெளிநாட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மேற்கொள்ளப்பட்ட கொலைகளில் முதலிடம் பிடிக்கும் இயக்கமாக ஐ.எஸ்.விளங்குகிறது.
 இதே வேளை மேற்படி ஊடகம் 2001 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல்களை பட்டியல்படுத்தியுள்ளதுடன் இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலையும் அதில் சேர்த்துள்ளது.
2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் அல் கொய்தா மேற்கொண்ட தாக்குதலில் 193 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றனர். அதே போன்று 2014 ஆம் ஆண்டு  நைஜீரியா போகோ ஹாராம் குண்டு வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பாரிஸ், பிரஸல்ஸ், ஆபிரிக்கா , மற்றும் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பு மேற்கொண்ட தற்கொலைக்குண்டு தாக்குதலுக்குப்பிறகு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலை இவ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்குதலை எதிர்பார்க்காத அரசாங்கம்
இதேவேளை இஸ்லாமிய மத அடிப்படைவாத குழுவாக ஐ.எஸ்.அமைப்பு இருக்கின்ற போதிலும் அது இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிலரை இணைத்து இத்தாக்குதல்களை நடத்தியதை அதியசமாகவே பார்க்க வேண்டியுள்ளதாக சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை தொடர்பான பகுப்பாய்வு நிபுணர் அலன் கீனன் தெரிவிக்கின்றார்.  ஏனென்றால் இலங்கை வரலாற்றை எடுத்துப்பார்த்தால் இங்கு வாழும் முஸ்லிகள் ஏனைய இனங்களுக்கு  எதிராக வன்முறைகளில் குழுக்களாகவோ அமைப்பாகவோ செயற்பட்டிருக்க வில்லை. தீவிர பௌத்த அடிப்படை வாத குழுக்களின் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும் அவர்கள் மிதமாகவே செயற்பட்டிருந்தனர் என்கிறார்.
2017 ஆம் ஆண்டு அறிக்கைகளின் பிரகாரம் தென்னாசிய நாடுகளுடன் ஐ.எஸ் அமைப்பின் தொடர்புகள் மிகவும் பலவீனமானதாகவே இருந்ததாக தெரியவருகிறது. சிரியா மீதான தாக்குதல் காலப்பகுதியில் அதாவது 2016 ஆம் ஆண்டின் படி ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி அங்கு சென்று பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையைப்பார்க்கும் போது இந்தியா- 75, பாகிஸ்தான் -650, இலங்கை -32 என உள்ளது. 
ஆனால் இதில் எத்தனைப்போர் தமது நாட்டிற்கு திரும்பி வந்தனர் என்ற தகவல்கள் தெளிவாக இல்லை. இந்நிலையில் இலங்கையைப்பொறுத்தவரை இது தொடர்பான தேடல்கள் மிக அதிகமாகவே உள்ளன.  ஏனெனில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அவர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. பெரும்பான்மையான முஸ்லிம்கள் இத்தாக்குதல் சம்பவங்களுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அந்த முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சில இளைஞர்கள் தவறான பாதைக்குச்செல்வதற்கு வழியேற்படும் நிலைமை கூட ஏற்பட இடமுண்டு. ஆகவே அரசாங்கம் இவ்விவகாரத்தில் மிகவும் கவனமாக செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  
மறுபக்கம் தென்னாசியாவானது இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுத குழுக்களின் பிராந்தியமாக மாறி வரும் அபாயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு துணை போகும்  இஸ்லாமியர்களை அதிகமாகக்கொண்ட நாடுகள் தென்னாசியாவில் இருப்பதே பிரதான காரணம்.   எனினும் ஐ.எஸ் என்பது ஒரு சர்வதேச தீவிரவாத இயக்கம் என்பதிலிருந்து விலகிச்சென்றுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அது எதிர்கொண்ட தோல்விகளையடுத்து தென்னாசியாவிலேயே அது நிலை கொண்டிருக்க முயற்சிக்கின்றது. அதற்கு சிறிய நாடுகளின் ஆதரவு அவசியம். எனினும் அதை தடை செய்வதற்கான சரியான பொறிமுறைகளை குறித்த நாடுகள் கொண்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.