ஞானசார வந்திருந்தாலும் உண்ணா விரதம் தொடர்கிறது

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமென ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நால்வர் தமது போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர். 

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை ஏனையவர்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்திய மதுகுருமார்கள் அறிவித்துள்ளனர். 

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று போராட்டம் நடைபெறும் இடத்திற்குவந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். 

இதன்போது குறுகிய காலத்திற்குள் கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்வாறு முடியாமல்போனால் இந்த போராட்டத்தினை தனது தலைமையில் முன்னெடுப்பதாகவும் ஞாசார தேரரினால் உறுதியளிக்கப்பட்டது. 

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)


Advertisement