#தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் #ஹேஷ்டேக்




மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது தமிழ்நாடு. அதிலும், தலைநகர் சென்னையில் முக்கிய நீர் ஆதரமாக விளங்கிய ஏரிகள் வறண்டு, பிளவுப்பட்டு மீன்கள் கொத்து கொத்தாக செத்து கிடக்கின்றன.

ஒருபுறம், பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம், இணையத்தில் தற்போது எழுந்துள்ள தண்ணீர் நெருக்கடிக்கு யார் காரணம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

சமூக ஊடகமான ட்விட்டரில் #தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

யாரை குறை கூறுவது?

"தண்ணீர் பிரச்சனைக்கு நாம் யாரையும் குறைகூற முடியாது. இந்நிலைக்கு மக்களாகிய நாமே காரணம். தற்போது, நாம் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை சேமிக்க வேண்டும்," என்கிறார் அருண்பாலா.

"காவேரியில் தண்ணீர் திறந்துவிட சொல்லி ஒருமாதம் ஆகிவிட்டது. அதைப்பற்றி எந்த அரசியல்வாதியும் கவலைப்படவில்லை," என்கிறார் விவேக்.
இன்றைய சூழலில் ரத்தம்கூட தானமாக பெற்றுவிடலாம் என்று கூறும் ஹேமலதா, ஆனால் தண்ணீர் மட்டும் கிடைக்காது என்றும், மக்கள் இனிமேலாவது விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
தண்ணீர் பிரச்சனையையின் வீரியத்தை உணர்த்தும் படங்கள்
ரகுவரன் என்ற பயனர் பெயர் தெரியாத ஓவியர் ஒருவரின் கார்ட்டூனை பதிந்துள்ளார். அதில், தண்ணீரில்லாத பானைக்குள் மிகுந்த நம்பிக்கையோடு காகம் சிறு கற்களை பானைக்குள் போட்டு நிரப்பி இறுதியில் நீரின்றி மரணத்தை தழுவியதை அந்த கார்ட்டூன் வெளிப்படுத்துகிறது.
சென்னை கொருக்குப்பேட்டையில் தண்ணீருக்காக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பெண்மணி மனம் வெதும்பி கலங்கும் புகைப்படம் தினமலர் நாளிதழில் வெளியாகியிருந்தது. இணைய பயன்பாட்டாளர்கள் பலரும் அந்த புகைப்படத்தை பதிந்து வருகின்றனர்.
காய்ந்துபோன சதுப்புநில பகுதி
சோழிங்கநல்லூரில் எல்காட் அருகே இருக்கும் சதுப்புநில பகுதியின் தற்போதைய நிலையை பதிவு செய்துள்ளார் ஜனா. அவருடைய பதிவில், "சதுப்புநில பகுதி தற்போது முற்றிலும் வறண்ட பகுதியாக மாறியிருக்கிறது. இந்த பகுதியை நீங்கள் கடந்து செல்லும்போது, ஒருமுறையேனும் இதை பார்த்து செல்லுங்கள், உங்கள் இதயம் நொறுங்கிவிடும்," என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
உங்களில் எத்தனை பேர், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறையை வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார் ஜனனி ரவி. அதைத்தான் முதலில் நாம் செய்ய வேண்டும் என்றும், முதலில் தண்ணீர் நிலத்தில் வரட்டும் அதன்பிறகு அதை சேமிப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.