முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள்


இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த துறைகளுக்கு பதில் அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவர்களில் மூன்று பேர் வகித்த பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகிய அமைச்சர்கள் வகித்த பதவிகளுக்கே, பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ரஊப் ஹக்கீம் ராஜிநமா செய்த நகர திட்டமிடல், நீர் வழங்கல் துறைக்கு பதில் அமைச்சராக, அதன் ராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
றிசாட் பதியுதீன் ராஜிநாமா செய்த கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் துறைக்கு, அதன் பிரதியமைச்சர் புத்திக பத்திரன, பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை
கபீர் ஹாசீம் ராஜிநாமா செய்த பெட்ரோலிய வள அபிவிருத்தி துறைக்கு, அதன் பிரதியமைச்சர் அனோமா கமகே, பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனங்களை இன்று வழங்கினார்.
எவ்வாறாயினும், எம்.எச்.எம். ஹலீம் ராஜிநாமா செய்த அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார துறைக்கு, இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுமான ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை கூட்டாக ராஜிநாமா செய்திருந்தனர்.
தற்போது இரங்கை அரசாங்கத்தில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.