குடைக்குள் மழை.பாரதப் பிரதமர், இலங்கையில்


இன்று முற்பகல் கொழும்பு வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தலைமையில் விசேட பாதுகாப்புப் பிரிவு ஏற்கனவே கொழும்பில் தங்கியிருந்து பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்தது.
பிரதமர் மோடி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும்போது அந்தப் பகுதியில் தொலைபேசி சேவைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக முடக்கப்பட்டிருந்தன. எட்டடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டு வீதிகள் பல மூடப்பட்டன.
பாதுகாப்புக் காரணங்களால் கொச்சிக்கடை தேவாலயத்துக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுரை கூறப்பட்டபோதும் அவற்றை நிராகரித்து அங்கு செல்லவேண்டுமென மோடி வலியுறுத்திச் சென்றார் என உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கொட்டும் மழைக்கு மத்தியில் ஜனாதிபதி செயலகத்துக்கு வந்த மோடியை குடை பிடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார்.
கொட்டும் மழையிலும் படையினரின் அணிவகுப்பு நடந்தது. அதனை ஏற்ற மோடி பின்னர் ஜனாதிபதி மாளிகையில் மரக்கன்றொன்றை நாட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிய உணவு வழங்கிய பின்னர் அரசியல் கட்சித் தலைவர்களை இந்தியப் பிரதமர் சந்தித்தார்.