அரசியல் தீர்வு: தமிழர்களைப் போன்று முஸ்லிம்களுக்கும் விரக்தி!


“புதிய அரசமைப்புக்கே இந்த அரசுக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது. ஆனால், அரசால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. தமிழ் மக்களைப்போல் நாங்களும் தீர்வை எட்டுவதில் விரக்தியுற்றிருக்கின்றோம். புதிய அரசமைப்பு ஊடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும்.”
– இவவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புதிய அரசமைப்புத் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை தீர்மானத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“ரணில் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும்போது புதிய அரசமைப்புத் தயாரிக்கப்பட்டு அதனூடாக அதிகார பரவலாக்கம் மற்றும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தவறியுள்ளது. ஆனால், அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 19ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முடிந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாகவே அவரும் தெரிவித்திருந்தார். அதபோன்று அனைத்துத் தலைவர்களும் இதனை இல்லாமலாக்குவதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மனம் மாறுகின்றனர். இருப்பினும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க வேண்டும் என்ற விடயத்தில் நாங்கள் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.
எமது தலைவர் அஷ்ரப் 3 மணித்தியாலத்துக்கும் மேல் இந்தச் சபையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் உரையாற்றி இருக்கின்றார். எனினும், அந்தக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அதனை மேற்கொள்ளத் தடையாக இருந்தது. சிலர் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அவற்றையெல்லாம் மறந்து தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம்.
தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் அரசமைப்பு வரைபில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. செனட் சபை என்றும், மேல் சபை என்றும் புதிய கட்டமைப்புக்கள் இருக்கின்றன. அதிகார பரவலாக்கம் மூலமாகவே ஒற்றுமைமிக்க சமுகத்தை கட்டியெழுப்ப முடியும். அரசமைப்பில் ஏக்கிய ராஜ்ஜி என்ற சொல்லை சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொண்டிருக்கின்றனர். ஏக்கிய என்பது ஒருமித்த நாடு என்ற அர்த்தமாகும். அதில் எந்தப் பிளவும் இல்லை. புதிய அரசமைப்பு ஊடாக நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபடவேண்டும்.
புதிய அரசமைப்பு ஊடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும். அதேபோன்று தேர்தல் முறைமையில் இருக்கும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்ற முறைமையில் அடுத்த வரவு – செலவு திட்டத்தை வெற்றிகொள்ள முடியாத நிலை பல தவிசாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இன்று பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நடத்த வேண்டும்” – என்றார்